நாம் வாழும் பூமியில் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என இயற்கை பேரிடர்கள் அதிகம் நடக்கிற நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இந்த நாடு பசிபிக் நெருப்பு வளையத்தில் புவித்தட்டுகள் மோதிக்கொள்கிற இடத்தில் அமைந்துள்ளதால், எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த நாட்டின் சுலாவெசி மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6.02 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


இயற்கையின் கோரதாண்டவத்தால் பலு, டோங்காலா, மமுஜூ ஆகிய 3 நகரங்களை சுனாமி விழுங்கி உள்ளது.


டோங்காலாவில் இதுவரை மீட்புக்குழுவினரால் நுழைய முடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள லட்சக்கணக்கான மக்களின் கதி என்னவென்று தெரியவில்லை.


அங்கு 3 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய டோங்கலா நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பீதியில், வீடுகளுக்குள்ளும், பிற கட்டிடங்களுக்குள்ளும் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு, சாலைகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் ஓடினர். இருப்பினும் ஏராளமான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப்பெறப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.


ஆனால் திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த டோங்கலா நகரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள பலு என்ற கடலோர நகரத்தில் 10 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கின. இது அந்த நகரில் ஏராளமானவர்களை கடலுக்குள் வாரிச்சுருட்டியது. வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. கட்டிடங்களையும் சுனாமி அலைகள் வாரிச்சுருட்டின. அந்த நகரமே உருக்குலைந்து போனது சோகம்.


இது தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீவிரமாக பரவின. அவற்றில் சுனாமி அலைகளில் சிக்கிய மக்கள் ஓலமிடுவதும், கார்கள் அடித்துச்செல்லப்படுவதும், சாலைகளில் ஆணும், பெண்ணும், குழந்தைகளோடு ஓடுவதும் இடம் பெற்றிருந்தன. அவை காண்போரை கதி கலங்க வைத்தன. தகவல் தொடர்பு சாதனங்கள் முடங்கிப்போயின.


.பலு நகரில் கடலோரங்களில் உடல்கள் நேற்று ஒதுங்கத்தொடங்கின.

எங்கு பார்த்தாலும் மனித உடல்கள்தான். நிலநடுக்கத்தாலும், சுனாமியாலும் இருமுனை தாக்குதலாக உயிரிழப்புகள் அமைந்தது பெருத்த சோகம். இந்த ஒரு நகரத்தில் மட்டுமே 384 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், சமீபத்திய தகவலின்படி நிலநடுக்கம், சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.