இலங்கையின் தேசிய கீதத்திலேயே ஈழம் இருக்கின்றது! – தமிழீழம் என்று எழுத அஞ்சத் தேவையில்லை என்கிறார் சிவஞானம்

“இலங்கையின் தேசிய கீதத்திலேயே ஈழம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈழம் என்று எழுதுவதற்குப் பயப்படத் தேவையில்லை.”
– இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
மாகாண சபையின் நேற்றைய அமர்வில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட ஆளும் கட்சி உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
“திருவள்ளுவர் சிலை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு கிளிநொச்சியிலும் வைக்கப்பட்டது. சிலையின் கீழ்ப் பகுதியில் கிளிநொச்சி, ஈழம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனை அவதானித்த புலனாய்வாளர்கள் ஈழம் என்ற வார்த்தையை நீக்குமாறு பணித்தனர். அப்போது சபை அமைக்கப்பட்டிருக்கவில்லை. செயலர் அந்த வார்த்தையை நீக்கினார்.
சபை அமைக்கப்பட்ட பின்னர் சிலையின் கீழ்ப் பகுதியில் கிளிநொச்சி, ஈழம் என்று எழுதப்பட்டிருந்தது. ‘ஈழம்’ என்று எழுதியதற்காக கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்” – என்றார் பசுபதிப்பிள்ளை.
ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், “ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும். தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு, கிழக்கை தமிழீழம் என்று அழைப்பார்கள். தமிழீழம் என்பது தனிநாடு அல்ல” – என்றார்.
அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், “இலங்கையின் தேசிய கீதத்திலேயே ஈழம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈழம் என்று எழுதுவதற்குப் பயப்படத் தேவையில்லை” – என்றார்.