India

உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 6 பேர் பலி, கனமழைக்கு பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை தொடர்பான சம்பவங்களால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பருமழை தீவிரத்தை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கடும் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஷாஜகான்பூரில் மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் சீதாப்பூர், அமேதி, அவுராயா, ரேபரேலி, உன்னாவோ ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் வரை பலியாகியுள்ளனர். 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் மழையின் காரணமாக 8 கால்நடைகளும் இறந்தன.

உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள கெம்ப்டி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய எல்லையை தாண்டி நீண்ட தூரத்துக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டதுடன், அங்குள்ள கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top