கொழும்பில் குவிந்தது மகிந்தவின் பட்டாளம் – போக்குவரத்து இயல்பு வாழ்வு சீர்குலைவு!

அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்து கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவும், இந்தப் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியொன்று லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தை சென்றடைந்தது.
இங்கு ஒன்று திரண்டுள்ள ஆர்ப்பாட்டகாரர்கள், அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர். லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடைபெறவுள்ள அரசுக்கு எதிராக கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல பகுதிகளில் இருந்து மக்கள் பேரணியாக கொழும்பு நோக்கி படையெடுத்துள்ளனர்.
இதேவேளை போஹா சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் இணைந்து கொண்டார்.
இந்தப் பேரணியை முன்னிட்டு கொழும்பில் கலகம் அடக்கும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பெருமளவு பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் வதிவிடம், நாடாளுமன்றம் போன்றவற்றுக்கு கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.