சர்வதேச தலையீட்டை அரசு நிராகரிக்க முடியாது -சுமந்திரன்

“போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத் தலையீட்டுடன் கூடிய நீதி விசாரணை இடம்பெறும் என்பதை இலங்கை அரசு ஐ.நாவில் ஏற்கனவே இரு தடவைகள் ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், இப்போது சர்வதேசத் தலையீடு வேண்டாம், உள்நாட்டிலேயே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்கின்றோம் என்று சனாதிபதி மைத்திரிபால ஐ.நா.வில் கூறியுள்ளதைக் கூட்டமைப்பு ஒருபோதுமே ஏற்காது. இப்படிக் கூறியிருப்பதன் மூலம் எமக்கு மட்டுமன்றி சர்வதேசத்துக்கும் எழுத்து மூலமாக வழங்கிய வாக்குறுதியை சனாதிபதி மீறியுள்ளார்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.
சனாதிபதி மைத்திரிபால ஐ.நாவில் நிகழ்த்திய உரை தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? என்று ஊடகமொன்று’ அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
ஐ.நா. பொதுச் சபையில் சனாதிபதி விசேட பொறிமுறை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக முன்னர் கூறியிருந்தார். இராணுவத்தினருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் வகையில் அவரது அந்த விசேட பொறிமுறை அமைந்திருந்தது.
எனினும் கூட்டமைப்பு இதற்கு எதிரான நிலைப்பாட்ட்டைக் கொண்டிருக்கிறது. அதாவது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
சனாதிபதியின் இந்தத் திட்டம் தொடர்பில் நாங்கள் ஏற்கனவே சர்வதேச சமுகத்துக்குத் தெரியப்படுத்தி இது தொடர்பில் எமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியிருந்தோம்.
ஐ.நா. பொதுச் செயலருக்கும் ஏற்கனவே அறிவித்து, சனாதிபதியின் இந்தத் திட்டத்தை ஒரு அங்குலம் கூட நகரவிடமாட்டோம் என்று தெரியப்படுத்தி இருந்தோம்.
அதன் காரணமாக இறுதி நேரத்தில் சனாதிபதி அந்தத் திட்டத்தை ஐ.நா. பொதுச் சபையில் முன் வைக்காமல் கைவிட்டுவிட்டார்.
ஆயினும் அவர் தனது ஐ. நா. உரையில், சர்வதேசத் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்றும் உள்நாட்டிலேயே எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கிறோம் என்றும் அதற்கு சர்வதேசம் உதவவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அவரது இந்தத் திட்டத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். இதனை ஒருபோதுமே ஏற்கமுடியாது. இந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் 2015 ஒக்ரோபர் முதலாம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 30/1 என்ற தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்டது.
இலங்கை இணை அனுசரணை கொடுத்தமைக்குக் காரணம் அந்த வருடத்தில் மார்ச் மாதத்தில் வெளிவரவிருந்த சர்வதேச விசாரணை அறிக்கையைப் பிற்போடும்படி கேட்டு அந்த அறிக்கை அடுத்து வரும் செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி வெளிவந்தபிறகு சர்வதேசத்தோடும் எம்மோடும் பேச்சு நடத்தி இணங்கி 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளில் சர்வதேசத் தலையீடு முழுமையாக இடம் பெறும் என இலங்கை அறிவித்திருந்தது. அதற்கு ஒன்றரை வருடங்களின் பின்னர் 2017 மார்ச் மாதத்தில் திரும்பவும் 34/ 1 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கும் இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. இரண்டு தீர்மானங்களும் ஒன்றுதான். இந்த இரண்டு வருடங்களிலும் புதிய அரசின் நிலைப்பாடு, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத் தலையீடு இடம்பெறும் என்றுதான் இருந்தது. அதற்காக இலங்கை சர்வதேசத்தின் உதவியையும் நாடியிருந்தது.
அத்துடன் 2015 செப்ரெம்பர் 14 ஆம் திகதி இலங்கை வெளி விவகார அமைச்சர் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரையாற்றும்போது, மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதம் ஒரு புதிய அரசமைப்பு ஊடாகத்தான் ஏற்படமுடியும். அதை நாங்கள் செய்வோம் என்ற வாக்குறுதியையும் உலகத்துக்கு அளித்திருந்தார்.
அதற்கான முன்னெடுப்புக்களும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டமை அனைவருக்கும் தெரியும். 2016ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றி முடிக்கக் கூடியதாக அந்த முயற்சிகள் இடம்பெற்றிருந்தாலும் அதற்குச் சரியான அரசியல் தலைமைத்துவம் கொடுக்கப்படாததால் அது இன்றுவரை இழுபட்டு இழுபட்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு வரைவு அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. ஆயினும் நீண்ட இழுத்தடிப்பை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. அதற்கு ஒரே ஒரு காரணம் சனாதிபதி அதற்கான அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுத்து அதை நடத்தாமல் இருப்பதுதான். அதே போலத்தான் பொறுப்புக்கூறல் விடயத்திலும் நீண்ட இழுத்தடிப்புக்களைக் காணக்கூடியதாக உள்ளது.
உள்நாட்டில் உள்ள சவால்கள் சனாதிபதிக்குப் புரியாததல்ல. தெற்கிலே இனவாதிகளின் சவாலை அவர் எதிர் நோக்கக்கூடும். ஆனாலும் அவற்றையும் முறியடிக்கும் திராணி அவரிடம் இருக்கவேண்டும். தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறை வேற்றவேண்டும். இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் எமது மக்கள் அவருக்கு வாக்களித்திருந்தார்கள். இன்னும் ஒன்றரை வருட காலம் இருக்கும் நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு அவர் முன்னின்று செயற்படவேண்டும். பொறுப்புக் கூறல் விடயத்தில் உலகுக்குக் கொடுத்த வாக்குறுதியை அவர் மீறக்கூடாது. எனவே அவர் தனது நிலைப்பாட்டை உடன் மாற்ற வேண்டும் – என்றார்.