சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் !

புவி வெப்பமயமாதல் இதேபோன்று நீடித்தால், சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகில் வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால், துருவ பகுதிகளில் உள்ள பனிமலைகள் வேகமாக உருகி வருவதாகவும், இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் ஏற்கனவே எச்சரித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான Climate Central வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறுகையில், ‘பருவநிலை மாறுபாடு காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், புவியின் வெப்பநிலை மேலும் 4 டிகிரியாக உயர்ந்துவிடும்.
அந்த வெப்ப நிலையை புவி எட்டும் பட்சத்தில், பல அபாயகரமான விளைவுகள் ஏற்படும். குறிப்பாக சீனாவின் ஹாங்காங், ஷாங்காய், டியான் ஜின் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கும். இதனால் அங்கிருந்து 5 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற நேரிடும். அதேபோல் உலக அளவில் 6 கோடி பேர் வசித்து வரும் நிலங்களும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பருவநிலை மாறுபாடு மாநாட்டில், புவி வெப்பமயமாதலை 2 சதவிதத்துடன் நிறுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றி, நடவடிக்கைகள் மேற்கொண்டால் இந்த அபாயத்தை தவிர்க்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.