சோமாலியாவில் கார் குண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

சோமாலியா நாட்டில் அரசு அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்தில் உள்ள அம்மாவட்ட தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீது நேற்று வேகமாக வந்த ஒரு கார் மோதி வெடித்துச் சிதறியது.இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 6 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர் என முதல் கட்டமாக தகவல் வெளியானது.
கார் குண்டு வெடித்து சிதறிய வேகத்தில் அருகாமையில் இருந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது..இதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகின்றன. ஒரு மசூதியின் மேற்கூரை மற்றும் சில வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.இந்த குண்டுவெடிப்பால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாலாபுறமும் ஓடினர்.
அம்புலன்ஸ்களின் நடமாட்டத்தை காணமுடிகின்றது இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மக்கள் தேட ஆரம்பித்துள்ளனர் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடிபாடுகளுக்குள் மனித கரமொன்றையும் இரத்தக்கறைகளையும் காணக்கூடியதாக உள்ளது என ரொய்ட்டர் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.