தனக்கு பின் நாமலை முன்னிறுத்திய மஹிந்த! கோத்தபாயவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம் ..

மஹிந்தவின் ஜனபலய போராட்டத்தில் தோல்வி அடைந்தவர் கோத்தபாய ராஜபக்ச மாத்திரமே. மஹிந்தவுக்கு பிறகு நான்தான் என கனவு கண்டவருக்கு மஹிந்த ராஜபக்ச சிறந்த செய்தியொன்றை கூறியுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் மூலம் கோத்தபாயவின் ஜனாதிபதி கனவை கலைத்து அடுத்த தலைவராக நாமல் ராஜபக்சவை மறைமுகமாக மஹிந்த ராஜபக்ச நியமித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நல்லாட்சிக்கும் மஹிந்தவுக்கும் கிடைத்த வெற்றியே ஜனபலய போராட்டம், ஒரே இரவில் ஆட்சியை கவிழ்ப்போம் என கூறி நேற்று கொழும்புக்கு வந்தவர்கள் வீதிகளில் கவிழ்ந்து கிடந்ததை நேற்று ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.
இரவு முழுவதும் தூங்காமல் வீதிகளில் இருந்து அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என கூறியவர்களால் இரவு 11 மணிவரை கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. பல இலட்சம் மக்களை கொண்டுவந்து கொழும்பை முடக்குவோம் என கூறியவர்களால் மதுபானம், பிரியாணி, பணம் கொடுத்தும் ஒரு இலட்சம் மக்களை கூட கொழும்புக்கு கொண்டுவர முடியவில்லை. இரவு முழுவதும் விழித்திருப்போம் என மஹிந்த ராஜபக்ச கூறிய வார்த்தைகளை கூட அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. மதுபானம் வழங்கி போராட்டத்துக்கு மக்களை கூட்டியதாலேயே மஹிந்தவால் கூட அவர்களை ஒரு இரவு கூட கட்டுப்படுத்த முடியாமல் போனது.
இந்த போராட்டம் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த போராட்டத்தின் மூலம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின் மஹிந்தவின் செல்வாக்கில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் மஹிந்த சகோதரர்களின் நோக்கம் போன்றவற்றை மக்கள் உணர்ந்துள்ளனர். இது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல மஹிந்த ராஜபக்சவுக்கும் கிடைத்த வெற்றியே. நாமல் ராஜபக்சவை தனக்கு பின் முன்னிறுத்த வேண்டிய தேவையே மகிந்தவுக்கு காணப்பட்டது. இந்த போராட்டம் மூலம் மஹிந்த அவரின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார்.
இருந்தாலும் இவ்வளவு செலவு செய்தும் ஒரு போராட்டத்தை எவ்வாறு ஒழுங்கு செய்ய வேண்டும் என நாமலுக்கு தெரியவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் இதை விட சிறப்பாக பல போராட்டங்களை ஒழுங்கு செய்கின்றனர். குளிரூட்டப்பட்ட தனியான அறையில் பரீட்சை எழுதியவர்களுக்கு இது கொஞ்சம் சிரமமான விடயம்தான். எனவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் நாமல் சிறிது காலம் போராட்டங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என பயிற்சி பெற வேண்டும்.
இந்த போராட்டத்தில் தோல்வி அடைந்தவர் கோத்தபாய ராஜபக்ச மாத்திரமே. மஹிந்தவுக்கு பிறகு நான்தான் என கனவு கண்டவருக்கு மஹிந்த ராஜபக்ச சிறந்த செய்தியொன்றை கூறியுள்ளார். இந்த போராட்டம் மூலம் கோத்தபாயவின் ஜனாதிபதி கனவை கலைத்து அடுத்த தலைவராக நாமல் ராஜபக்சவை மறைமுகமாக நியமித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.