News

திலீபன் நினைவேந்தலிற்கு தடையில்லை !

தியாகி திலீபனின் நினைவிடத்தில் புனரமைப்பது சட்டவிரோதமானதல்ல, பொலிசார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதை செய்ய முடியாது என யாழ் மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

திலீபனின் நினைவிடத்தில் நிழனவேந்தல் செய்ய அனுமதிக்க கூடாது, விடுதலைப்புலிகள் ஒரு பங்கரவாத இயக்கம் என யாழ் பொலிஸ் நிலைய பொலிசார் யாழ் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். கொழும்பிலிருந்து வந்த விசேட உத்தரவின் பெயரிலேயே யாழ் பொலிசார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மாவட்ட நீதிபதி ச.சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, முன்னிலையாகியிருக்குமாறு யாழ் மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலனிற்கு மன்று உத்தரவிட்டிருந்தது. யாழ் மாநகரசபை ஆணையாளர் சார்பில் , மாநகரசபையின் சட்டத்தரணி ராஜரட்ணம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

“திலீபனின் நினைவுத்தூபி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு அரசு அனுமதித்துள்ளது. தூபி அமைக்கும்முகவராகவே மாநகரசபை உள்ளது. எனவே மாநகரசபையை இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு இழுக்க முடியாது“ என எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பணம் செய்தார்.

எனினும், தேசிய பாதுகாப்பு, இன முறுகல் என சில காரணங்களை குறிப்பிட்டு பொலிசார் தரப்பில் சமர்ப்பணம் செய்யப்பட்டது. இதேவேளை,  கடந்த பத்து நாட்களாக திலீபன் தூபியில் அஞ்சலி செலுத்தி வரும் தரப்பு என குறிப்பிட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சமர்ப்பணம் செய்ய சட்டத்தரணி கு.குருபரன் அனுமதி கோரினார். எனினும், அதனை மன்று நிராகரித்தது.

சமர்ப்பணங்களின் பின்னர், மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
2 மணிக்கு நீதிமன்ற அமர்வு ஆரம்பித்ததும், நீதிபதி தீர்ப்பை அறிவித்தார். திலீபனின் நினைவிடத்தை புனரமைப்பது சட்டவிரோதமானதல்ல, பொலிசார் கேட்டுக் கொண்டதன்படி நினைவேந்தலை தடை செய்ய முடியாது, நாளை நினைவேந்தலை நடத்துவதில் எந்ததடையுமில்லையென அறிவித்தார்.

நினைவேந்தலை யாழ் மாநகரசபையே நடத்தும் என வழக்கு விசாரணையின் பின் சுமந்திரன் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

Latest News

To Top