துஷ்பிரயோக அபாயத்திலிருந்த இளம்பெண்ணைக் கைவிட்ட அரசு காப்பகம்: மன்னிப்புக் கேட்ட அமைச்சர்…

பாலியல் துஷ்பிரயோக அபாயத்திலிருந்த ஒரு இளம்பெண், கர்ப்பமாக இருந்த ஒரு பதின்ம வயது சிறுமி உட்பட இளைஞர்களை கைவிட்ட அரசு காப்பகத்தின் செயல்களுக்காக கனடாவின் Yukon மாகாணத்தின் அமைச்சர் ஒருவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
அரசு காப்பகங்களில் இளைஞர்களும் சிறுவர்களும் நடத்தப்படும் விதம் குறித்து பிரபல கனடா ஊடகம் ஒன்று நடத்திய ஆய்வில், ஒரு சிறுவன் கழுத்தை நெரிக்கப்பட்டது, பாலியல் துஷ்பிரயோக அபாயத்திலிருந்த ஒரு இளம்பெண் காப்பகத்திற்குள் அனுமதிக்கப்படாதது, கர்ப்பமாக இருந்த ஒரு பதின்ம வயது சிறுமி காப்பக ஊழியரால் தள்ளி விடப்பட்டது உட்பட பல அராஜக சம்பவங்கள் வெளியாகின.
அது மட்டுமின்றி இரு இளைஞர்கள் காப்பகத்தை விட்டு வெளியேற்றப்பட்டு -25 டிகிரி கடுங்குளிரில் தவிக்க விடப்பட்டுள்ளார்கள்.இச்சம்பவங்கள் குறித்து வெளியான அறிக்கை, Yukon மாகாணத்தின் சுகாதார மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் Pauline Frost சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தியது.
இந்நிலையில் நேற்றைய தினம் அமைச்சர் Pauline Frost அரசு காப்பகங்களில் சில இளைஞர்கள் நடத்தப்பட்ட விதத்திற்காக வெளிப்படையாக மன்னிப்புக் கோரியதோடு காப்பகங்கள் மோசமான நிலையில் இருப்பதோடு அவற்றில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
மோசமாக நடத்தப்பட்ட இளைஞர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், Yukon அரசுதான் உங்களுக்குப் பொறுப்பு, ஆனால் நாங்கள் உங்களைக் கைவிட்டு விட்டோம்’ என்றார் அவர்.
விசாரணையை தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட பணி மற்றும் பணி வழங்கல் வழக்கறிஞரான Pam Costanzo, சட்ட மற்றும் உள்துறைக் கொள்கைகளை மீறி குறைந்த பட்சம் ஒரு நபராவது சமூக சேவைகள் துறை ஊழியர்களால் மோசமாக நடத்தப்பட்டதைக் கண்டறிந்துள்ளார்.
இதுபோல ஒன்றல்ல, இரண்டல்ல, பல விதி மீறல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. Pam Costanzoவின் அறிக்கையால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், புகார்கள் குறித்து துறை நடந்து கொண்ட விதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றார்.
குறிப்பிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட ஊழியர்கள் தற்போது அரசாங்கத்தில் பணிபுரியவில்லை, சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்கள், சிலர் ராஜினாமா செய்து விட்டார்கள் என்பதை துறை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர்.