நேபாளத்தில் மனித உரிமை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்து

நல்லாட்சி அரசாங்கம் அதன் மூன்றரை வருட ஆட்சிகாலத்தில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தி மனித உரிமைகளைப் பாதுகாத்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சிபேதம், பாரபட்சம் பாராது ஊழல் மோசடிகாரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி அங்கு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, ‘நான் பிரதிநிதியாக வந்திருக்கும், இலங்கையில், கடந்த மூன்றரை வருடங்களில் ஜனநாயகத்தை பலப்படுத்தியுள்ளோம். மனித உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம். ஊழல் மோசடிகளைத் தடுக்க புதிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளோம்.
பாரபட்சம் பாராமல், கட்சிபேதம் பாராது, அரசாங்கமா, எதிர்க்கட்சியா என்றில்லாமல், ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக எடுக்கவேண்டிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இலங்கையில் நீதித்துறையினை பலப்படுத்தி அதனை சுயாதீனமாக்கியுள்ளோம். பிம்ஸ்டெக்கின் இலக்கை அடைய நாம் பல விடயங்களில் முக்கிய அவதானம் செலுத்த வேண்டும்.
இலவசக் கல்வி, இலவச சுகாதாரம், பொருளாதாரம், விவசாயம், உல்லாசத் துறை, மீனவர் தொழில், இவை அனைத்திலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
நாடு என்ற வகையிலும், பிராந்தியம் என்ற ரீதியிலும், தங்கள் கலாசாரங்களைப் பேணிப் பாதுகாத்தவாறு பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற, வலயத்திலுள்ள நாடுகள் ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்கு வரவேண்டும.
பிம்ஸ்டெக் ஒரு பரந்த நோக்கத்துடன் செயற்பட வேண்டும். எந்த ஒரு இலக்கும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க கூடாது, இருக்காது என்று நம்புகிறேன்.
இன்று மனித சமூகம் முகம் கொடுக்கும் பிரச்சினை, ஒவ்வொரு நாடும் முகம் கொடுக்கும் பிரச்சினை, பிராந்திய ரீதியில் ஏற்படும் பிரச்சினைகள், சர்வதேசத்தில் ஏற்படும் பிரச்சினகள் இவ்வாறு பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும், என்பது குறித்து நாம் தெளிவான ஒரு வேலைத்திட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.’ எனத் தெரிவித்தார்.