படுகொலைகளுக்குப் பின்னால் அரசின் மறைமுகம்! சிறீதரன் காட்டம்!!

மக்கள் கொலைகளுக்கு பின்னாலும் பெண்களின் வன்கொடுமைகளுக்குப் பின்னாலும் அரசின் மறைமுகங்கள் இருப்பது தெளிவாக தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் படுகொலைக்கு நீதிகோரி முறுகண்டி மற்றும் இந்துபுரம் கிராம மட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முறுகண்டிப்பகுதியில் நேற்று காலை பத்து மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
முல்லைத்தீவு மாவட்டம் திருமுறுகண்டியில் பிறந்து வளர்ந்த வசித்துவந்த நித்தியகலா கிளிநொச்சி மாவட்டத்தில் உடலமாக மீட்கப்பட்டார். இதைபோல பல செய்திகள் கடந்த காலங்களில் நாங்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது. வித்தியாவில் தொடங்கி சேயா, றெஜினா, நித்தியா என்று பெண்கள் மீதான படுகொலைகளும் வன்முறைகளும் ஈவிரக்கமற்ற மனிதநேயத்தை நேசிக்காதவர்களுடைய மனித குலத்திற்கு எதிரான குற்றக்கொலையினை நாங்கள் அவதானிக்க முடிந்துள்ளது.
இந்த நாட்டில் நாங்கள் ஒரு திறந்தவெளிச்சிறைச்சாலையில் நூறுவீதமும் படையினரின் வலைப்பின்னலுக்குள் எங்கள் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
குவிக்கப்பட்டுள்ள பொலிசார், அதிரடிப்படை, கடற்படை, விமானப்படை என்று எங்கு பார்த்தாலும் புலனாய்வாளர்களின் கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த மக்கள் வாழ்கின்ற சூழலில் பெண்கள் இளைஞர்கள்,சிறுமிகள் மீதான தாக்குதல்கள் வன்முறைகள் ஏன் நடைபெறவேண்டும் போர் நடைபெற்ற பிற்பாடு போரில் ஈடுபட்ட சமூகத்தை அவர்களை கேலிக்குரியவர்களாக அவர்களை காட்டுமிராண்டிகளாக காட்டுவதற்கு அவர்களை மனிதநேயம் அற்றவர்களாக காட்டுவதற்கு அரச படைகளே பின்புலத்தில் இருந்து இயக்குவது மிக தெளிவாக தெரிகின்றது.
அரசு நினைத்திருந்தால் இந்த விடயங்கள் நடைபெறாமல் தடுத்திருக்கலாம். திருமுறுகண்டி பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை என்றால் அதற்கு பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கின்றது?
மக்கள் கொலைகளுக்கு பின்னால், பெண்களின் வன்கொடுமைகளுக்கு பின்னால் அரசின் மறைமுகங்கள் இருக்கின்றமை தெளிவாக தெரிகின்றது.
ஆகவேதான் இந்த நாட்டில் ஒரு சுயாட்சியை, எங்களை நாங்கள் ஆளுகின்ற ஒரு ஆட்சிக்காக நாங்கள் பேசுகின்ற காரணங்களும் நியாயத்தன்மைகளையும் உங்களால் புரிந்துகொள்ளமுடியும். இதற்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம். அரசோடு பேசுகின்றோம். முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.
ஆனால் இவ்வளவும் நடைபெறும் காலத்தில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளை வன்மையாக கண்டிக்கின்றோம். உரிய இடங்களில் நடைமுறைகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.
தொடர்ந்தும் இவ்வாறான துன்பங்கள் நடைபெறக்கூடாது. சகோதரிகள் எங்கள் மண்ணில் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும்.
வெறுமனே நாங்கள் குற்றம் புரிபவர்கள் மீது கவனம் செலுத்தாமல் பெண்களாகிய நாங்களும் ஆண்களும் கூட கவனம் கொள்ளவேண்டும். எங்களுடைய பாதுகாப்பில் நாங்களும் சரியாக இருக்கவேண்டும். விழிப்பாக இருக்கவேண்டும்.
இந்த இடங்களில் கஞ்சா போதைவஸ்து கூட எம்மவர்கள்தானே கொண்டு வருகின்றார்கள். இதற்கு எம்மவர்கள்தான் காரணமாக இருக்கின்றார்கள். கசிப்பு யார் விற்றார்கள்? இதனை தடுக்கவேண்டிய கடமையும் கடப்பாடும் யாருக்கு இருக்கின்றது? நாங்கள் விழிப்படைந்தால் இலங்கை இராணுவம் அல்ல பொலிஸ் அல்ல இலங்கையின் எந்தபடைகளும் எங்களுக்கு சவாலாக இருக்க முடியாது. விழிப்பாக இருங்கள் தெளிவாக இருங்கள். நித்தியா போல இன்னும் ஒரு நித்தியாவிற்கு நடக்கக்கூடாது. இது கடைசியாக இருக்கவேண்டும்.
நாங்கள் நாங்களாக வாழ்வதற்கு எங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஒரு அணியாக ஒரு இனமாக நாங்கள் வாழ்கின்றசூழலை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
இருப்பவர்கள் இருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா என்ற வாசகத்தினை நாங்கள் பார்க்கின்ற போது உண்மையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த மண்ணில் இருந்திருந்தால் இப்பொழுதே அந்த குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டிருப்பான். ஆனால் ஏன் அவர்கள் இருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு எங்களால் சரியாக நடக்கக்கூடாது? நாங்கள் ஏன் நீதியாக நடக்கக்கூடாது? நீதியான முறையில் நாங்கள் ஏன் பயணிக்ககூடாது?
ஆகவேதான் கடந்த கால வரலாறுகளை நினைக்கின்ற நாங்கள் அவ்வாறான வாழ்க்கைக்குள் வாழ்ந்தவர்கள் நீதியோடும் நேர்மையோடும் வாழ்ந்தவர்கள் அந்த வாழ்க்கையினை நாங்கள்தான் கட்டி எழுப்பவேண்டும். உன்னதமான அந்த உணர்வுகளோடு ஒரு நித்தியா மீது நீங்கள் சத்தியம் செய்துகொள்ளுங்கள்.
இனியும் இவ்வாறு நடக்கக்கூடாது. நாங்கள் விழிப்படையவேண்டும் விழிப்புத்தான் இவ்வாறான குற்றங்களை தடுக்கும்.” என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.