பிரான்சில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரி!

பிரான்சில் காவல்துறை அதிகாரி ஒருவர், காருக்குள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டின் Maisons-Alfort நகரில் 42 வயதுமிக்க பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடல் Maisons-Alfort-யில் உள்ள அவரது வீட்டின் முன்பு நின்றிருந்த காரில் இருந்து மீட்கப்பட்டது. குறித்த அதிகாரியின் மனைவி தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட அதிகாரி Boissy-Saint-Leger நகரில் உள்ள காவல்நிலையத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஆனால், சில நாட்களுக்கு முன்பு Hay-les-Roses-யில் உள்ள காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
இதன் காரணமாக அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட அதிகாரியின் நண்பர் கூறுகையில்,
‘Boissy-Saint-Leger நகரில் ஒரு பொலிஸ் அதிகாரியாக பல படிநிலைகளில் அவர் உயர்ந்திருந்தார். சக அதிகாரிகளிடம் பாராட்டப்படக்கூடிய அதிகாரியாக அவர் இருந்தார். இதனால் அவரது தற்கொலையை அறிந்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட அதிகாரியின் மனைவியும் ஒரு பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.