லண்டன் நகரில் துப்பாக்கி சூடு: உயிருக்கு போராடும் 16 வயது சிறுவன்!

லண்டன் நகரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 16 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு லண்டன் யார்க் சாலை பகுதியில் இன்று அதிகாலை 12.45 மணிக்கு திடீரென துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த 16 வயது சிறுவனை மீட்டு, தெற்கு லண்டன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பொதுமக்களுக்கு குற்றவாளி குறித்த ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் கொடுக்குமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 1 வருடத்தில் மட்டும் லண்டன் நகரில் 102 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 100 கொலை சம்பவங்கள் குறித்த வழக்குகளை பொலிஸார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.