வடகொரியாவின் அணு ஆயுத நிபுணர் மரணம்

அமெரிக்காவின் தூக்கத்தை கெடுத்து, ஆசிய நாடுகளுக்கு துக்கத்தை கொடுத்த வடகொரியா நாட்டின் முன்னாள் ராணுவ மந்திரியும் அணு ஆயுத நிபுணருமான ஜு கியு சாங் மரணம் அடைந்தார்.
வடகொரியா நாட்டின் முன்னாள் ராணுவ மந்திரி ஜு கியு சாங். கடந்த 2009-ம் ஆண்டில் நெடுந்தூரம் சென்று தாக்கும் உன்ஹா-2, உன்ஹா-3 ஆகிய அதிநவீன ராக்கெட்களை தயாரித்து உலக நாடுகளை இவர் மலைக்க வைத்தார்.
பின்னர், அதிநவீன அணு ஆயுதங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தை தொடங்கி அதற்கான பணிகளை ஊக்குவித்தார். இதனால், 2013-ம் ஆண்டில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட தனிநபர்களில் ஒருவரான ஜு கியு சாங் கடந்த 2015-ம் ஆண்டு மந்திரி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், ‘பன்கைட்டோபேனியா’ (pancytopenia) என்னும் ரத்தத்தில் அணுக்களின் சமச்சீரின்மை நோயால் தாக்கப்பட்டிருந்த ஜு கியு சாங், தனது 89-வது வயதில் நேற்று மரணம் அடைந்தார். சிறந்த கல்வியாளரும், பேராசிரியருமான அவரது மறைவுக்கு வடகொரியா அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.