News

வன்முறை வெறியாட்டத்தை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர்கள்: ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை!

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை வெளிக்கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மியான்மர் நாட்டின் ராக்கைன் மாகாணத்தில் அதிகளவில் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். ஆனால், நீண்ட காலமாக அங்கு வசித்து வரும் இவர்களுக்கு அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது. மேலும் முஸ்லீம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியதால், முஸ்லீம்களின் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

முஸ்லீம்களின் வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறத்தல்கள் நடந்தன. இதனால், அங்கிருந்து தப்பிய பல ரோஹிங்கியா முஸ்லீம்கள் அண்டை நாடான வங்க தேசத்தில் அகதிகளாக குடியேறினர். இந்த தாக்குதல்களில் மியான்மர் நாட்டு ராணுவத்தின் பங்கு இருந்தது. இந்நிலையில், இந்த வன்முறை சம்பவங்களையும், ராணுவத்தின் துணையுடன் இது நிகழ்த்தப்பட்டதையும் ராய்ட்டர்ஸ் எனும் பத்திரிகை நிறுவனம் செய்தியாக வெளியிட்டது.

அந்நிறுவனத்தைச் சேர்ந்த வோ லோன்(32), யாவ் சோ ஓ(28) ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களே இதனை செய்தனர். இதனால் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி இரு பத்திரிகையாளர்களுக்கும், அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனையை எதிர்த்து, யாங்கோன் நகரில் பேரணி செல்ல உள்ளதாக பலர் அறிவித்துள்ளனர். அத்துடன் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு இது எதிரானது என்று உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மியான்மரில் இதற்கு முன்பும், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை குறித்த ஆய்வுத் தகவல்களை வெளியிட்ட யுனைடெட் வீக்லி நியூஸ் பத்திரிகையை சேர்ந்த நிறுவனருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top