India

ஸ்டெர்லைட் ஆய்வுக்கு எதிரான மேல்முறையீடு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையின் புதிய ஆய்வுக் குழுவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கூறும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா என்பது குறித்து ஆய்வு நடத்த மேகாலயா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு சிறப்பு ஆய்வுக்குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த வாரம் நியமித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதில், “ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும். ஆலையை தமிழக அரசு தரப்பில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ’’ என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா முன்னிலையில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா வைத்த கோரிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் புதிய ஆய்வுக்குழு அமைத்துள்ள உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து நீதிமன்றம் புதன்கிழமையே (இன்று) விசாரிக்க வேண்டும்’’ என்றார்.இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், ‘‘தமிழகத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது. ஒருவேளை அடுத்த வாரம் திங்கட்கிழமையன்று வழக்கு விசாரணை பட்டியலில் தமிழக அரசு மனு இடம்பெற்றால் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top