News

உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் எழுதியுள்ளனர்.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் இன்று இந்தக் கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளனர்.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான சுலக்சன், திருவருள், தபரூபன்,சிவசீலன், ஜெயச்சந்திரன், ஜெகன், நிர்மலன், தில்லைராஜ் ஆகியோரை நேற்றுப் பார்வையிட்டனர்.

இதன்போதே, குறித்த அரசியல் கைதிகள் கையெழுத்திட்ட, ஜனாதிபதிக்கான கடிதம், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சேனக பெரேராவிடம் கையளிக்கப்பட்டது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சேனக பெரேரா,

தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 107 அரசியல் கைதிகளில், பெரும்பாலானவர்களுக்கு எதிராக வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. சிலருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிலர், வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பெரும்பாலான வழக்குகளில் அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலமே, ஒரே சான்றாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் தம்மை ஏமாற்றி வருவதாகவும், அதனால் அரசியல் வாக்குறுதிகளில் நம்பிக்கையிழந்து போயிருப்பதாகவும் அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

அரசியல் கைதிகளில் பெரும்பாலானவர்களுக்கு இன்னமும் சிறைத்தண்டனை வழங்கப்படாத போதும், நீண்டகாலம் சிறையில் இருப்பதால் பெரும் தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள்.

அவர்கள் அரசியல் கைதிகளாக இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் பெற்றோரை இழந்திருக்கின்றார்கள். மேலும் சிலர் குழந்தைகளைக் கூட இழந்திருக்கின்றார்கள். அடிப்படையில், அவர்கள் அனைத்தையும் இழந்து போயுள்ளனர் என்று கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top