News

ஆப்கானிஸ்தானில் மாமூல் கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர்

ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் உள்ள பள்ளியில் பணியாற்றுபவர்கள் தங்களது சம்பளத்தில் ‘மாமூல்’ கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டில் கஸ்னி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு பாடம் நடத்த சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி வரும் ஓவ்வொரு ஆசிரியரும் மாதந்தோறும் சம்பளம் வாங்கிச் செல்லும்போது அவர்களை தலிபான் பயங்கரவாதிகள் வழிமறித்து ஒரு தொகையை ‘மாமூல்’ ஆக வசீலித்து வந்துள்ளனர்.

இதை அறிந்த கல்வித்துறை நிர்வாகம் ஆசிரியர்களின் சம்பளப்பணத்தை வங்கி கணக்கு மூலமாக செலுத்த ஆரம்பித்தது. வங்கிகளில் சம்பளம் போடுவதை எதிர்க்குமாறும், பள்ளி அலுவலகத்தில் ரொக்கப் பணமாக சம்பளம் கொடுக்குமாறு வலியுறுத்துமாறும் ஆசிரியர்களை தலிபான்கள் வற்புறுத்தினர். ஆனால், இதற்கு ஆசிரியர்கள் இணங்காததால் தலிபான்களின் ‘மாமூல்’ வருமானத்தில் மண் விழுந்தது.

இதனால் ஆத்திரமடைந்த தலிபான் பயங்கரவாதிகள் இங்குள்ள சில பள்ளிகளில் பணியாற்றும் 125 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் என சுமார் 160 பேரை இருநாட்களுக்கு முன்னர் கடத்திச் சென்றனர். 

ஆசிரியர்கள் இல்லாததால் இங்குள்ள சில பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top