இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சிறைச்சாலைகள் இடிந்து விழுந்ததில், அங்கிருந்த கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளியன்று 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமியும் தாக்கியது.
இயற்கையின் இந்த சீற்றத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உடமைகளை இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய அந்நாட்டு அரசு தீவிரமாக போராடி வருகிறது.
இந்நிலையில், நிலநடுக்கத்தின்போது சுற்றுச்சுவர் இடிந்ததால் பலு மற்றும் டோங்கலா சிறைகளில் இருந்து ஆயிரத்து 200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர். நிலநடுக்கம், சிறை வளாகத்தில் புகுந்த நீர் ஆகியவற்றால் உயிர் பயத்தாலும், தங்கள் குடும்பத்தினரின் நிலை அறியவும் குற்றவாளிகள் தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.