News

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலில் இதுவரை 1350 பேர் பலி

இந்தோனேசியா நாட்டின் சிலாவேசி தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1350 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தோனேசியாவில் கடந்த 29-ந்தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அங்கு இருந்த பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது. வீடுகள் இன்றி தவிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாப்பிட உணவும், குடிக்க தண்ணீர் இன்றியும் மக்கள் தவிக்கின்றனர். எனவே வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை உடைத்து உணவு பொருட்களை மக்கள் கொள்ளையடித்து வருகின்றனர். கம்ப்யூட்டர்கள், பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களும் சூறையாடப்படுகின்றன.

அதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் வழங்கப்படுகிறது. அவை போதுமான அளவு இல்லாததால் வணிக வளாகங்களை பொதுமக்கள் கொள்ளை அடிக்கின்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.

சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 34 மாணவர்கள் பிணங்களாக மீட்கப்பட்டனர். மேலும் 86 மாணவர்களை காணவில்லை. 52 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

இடிந்து கிடக்கும் 4 மாடி ஓட்டலின் இடிபாடுகளுக்குள் 50 பேர் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற மீட்பு குழுவினர் 3 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிருடன் சிக்கி தவிப்பவர்களை மீட்பதில் தீவிர முனைப்பு காட்டப்படுகிறது. வெல்டிங் மற்றும் எந்திரம் மூலம் கம்பிகளும், இடிபாடுகளும் அகற்றப்பட்டு வருகின்றன. மீட்பு பணிக்கு கூடுதல் போலீஸ் அதிகாரிகளை அதிபர் ஜோகோ விட்டோபோ அனுப்பி வருகிறார். புதைந்து கிடக்கும் இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கி தவிப்பவர்களை மீட்பதில் முன்னுரிமை அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் கடுமையான தாக்குதலால் பலு நகரில் உள்ள பெரிய பாலம் இடிந்தது. ஆஸ்பத்திரிகள் சேதம் அடைந்தன. இதனால் காயம் அடைந்த மக்களுக்கு திறந்த வெளியில் வைத்தும், ராணுவ முகாம்களில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விமானநிலையம் மூடப்பட்டுள்ளதால் சுமார் 5 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ராணுவ விமானம் மூலம் பலுவில் இருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து பிணங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை 1350 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பல அடுக்கு மாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

அனைத்து இடிபாடுகளும் அகற்றப்பட்டு மீட்பு பணி நிறைவுறும் போது பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என துணை அதிபர் ஜுசுப் கல்லா அச்சம் தெரிவித்துள்ளார். 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top