இலங்கையில் ஏற்படப்போகும் ஆபத்து?; எச்சரிக்கும் அமெரிக்கா!

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் சீனாவின் முன்னரங்க இராணுவ தளமாக மாற்றமடையும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பெண்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வெளிவிவகார கொள்கை தொடர்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“சீனாவின் மூலோபாய நோக்கங்களுக்கு இடமளிப்பதாக வாக்குறுதி வழங்கும் கட்சிகள், வேட்பாளர்களுக்கு நேரடியாக ஆதரவளித்து, சில நாடுகளின் அரசியலை பீஜிங் சீர்குலைக்கிறது.
தனது பூகோள செல்வாக்கை விரிவுப்படுத்தும் நோக்கில் சீனா கடன் எனும் இராஜதந்திரத்தை பயன்படுத்துகின்றது.
உலகின் பல நாடுகளுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சீனா பெருந்தொகையான நிதியை வழங்கி வருகின்றது.
இவ்வாறு வழங்கப்படும் கடன் அந்நாட்டிற்கு சிறந்த பயனளிக்கின்றது. இவ்வாறே இலங்கைக்கு சீனா பெருமளவான நிதியை கடனாக வழங்கியது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடனை செலுத்த முடியாமையின் காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அந்த வகையில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் பீஜீங்கின் வளரந்துவரும் நீல நீர் கடற்படையின் முன்னரங்க இராணுவத் தளமாக விரைவில் மாற்றமடையும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.