Canada

கனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு

பெண் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மேலும் அதிக உதவிகளை கனடா செய்ய வேண்டும் என ஒக்ஸ்ஃபாம் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் புதிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் கனடா மேற்கொண்டுவரும் மனிதாபிமான உதவிகள் குறித்து அணுக்கமான கற்கையினை மேற்கொண்டுள்ள ஒக்ஸ்ஃபாம் கனடா என்ற அந்த நிறுவனம், இந்த உதவிகளின் போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பலாபலன்கள் குறித்து ஆய்வு செய்துள்ளது.

அந்த வகையில் பாலியல் சமத்துவத்தினைப் பேணுவதிலும், உள்ளூர் வெளிநாட்டு கொள்கைகளில் பெண்கள் உரிமைக்கான முக்கியத்துவத்திலும் கனடா சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதனையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் அனைத்துலக அளவில் இடம்பெற்றுவருகின்ற மோதல்கள் மற்றும் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படும் இடங்களில் பெண்கள் நலனை முக்கியத்துவப்படுத்தி கனடாவால் இன்னமும் அதிக நற்செயல்களை மேற்கொள்ள முடியும் எனவும் ஒக்ஸ்ஃபாம் நிறுவனம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

இதேவேளை அனைத்துலக அளவிலான கனடாவின் உதவித்திட்டங்களுக்கான நிதிப் பங்களிப்பு தற்போது மிகவும் குறைவடைந்துள்ளதனையும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மொத்த தேசிய வருமானத்தில் 0.26 சதவீதம் மட்டுமே தற்போது செலவிடப்படுவதனையும் அது சுட்டி்ககாட்டியுள்ளது.

மொத்த தேசிய வருமானத்தில் 0.7 சதவீதத்தினை இவ்வாறான உதவித் திட்டங்களுக்காக செலவு செய்வதனை ஐ.நா. பரிந்துரைத்துள்ள நிலையில், கனடாவின் குறைந்த அளவு பங்களிப்பு, இந்த விவகாரத்தில் அனைத்துலக அரங்கில் அதன் தலைமைத்துவ வாய்ப்புக்களை குறைப்பதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top