News

கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் தவறுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 10வது தேசிய மாநாட்டின் நிறைவு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

இரண்டு தினங்கள் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அந்த கட்சியின் தவிசாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் வாசிக்கப்பட்டு பொதுச்சபையின் அனுமதி ஏகமனதாக பெறப்பட்டுள்ளது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு,

தமிழினத்தின் பேராதரவுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமானது இலங்கைத்தீவில் தேசியக் கேள்வியாக நீடித்து கொண்டிருக்கும் தமிழினத்தின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை ஒரே நாடு என்ற வரையறைக்குள் தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளை திருப்திப்படுத்த கூடியதும்

எம்மினத்தின் மரபுவழித் தாயகமான இணைந்த வடக்கு, கிழக்கு மாநிலத்திற்கு சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையிலான அரசியல் தீர்வாக அரசில் நிர்வாக ஏற்பாட்டினை சமஷ்டி எனப்படும் இணைப்பாட்சி அரசியல் ஆட்சி முறையை ஏற்படுத்துவதான அரசில் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு இதுவரை தயக்கம் காட்டி தவறியுள்ள நிலையில் இத்தேசிய மாநாடானது நல்லாட்சி அரசாங்கத்திற்கு கடந்த மூன்றாண்டு காலமாக எமது கட்சியும் அது அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்றத்தில் அளித்துவருகின்ற ஆதரவினை மீன்பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் அரசியல் தீர்வு தொடர்பான சகல யதார்த்த பூர்வமான விடயங்களையும் கவனமாகவும் ஆழமாகவும் பரிசீலித்து பின்வருமாறு அம்மாநாடு தீர்மானிக்கின்றது.

மேற்குறிப்பிட்டவாறு அரசில் தீர்வுத்திட்டம் ஒன்றினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் முன்வைக்க அரசாங்கம் தவறுமிடத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவினை முடிவுறுத்த வேண்டும்.

தமிழினத்தின் தாயகத்தில் யுத்தம் முடிவுறுத்தப்பட்டு ஒன்பது ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் நியாயமான காரணங்கள் எதுவுமின்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அரசபடைகள், ஆக்கிரமிப்புப்படைகள் என்ற தோரணையில் நிலைகொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மீண்டும் பிரகடனப்படுத்தி படைக்குறைப்பு என்பது திட்டவட்டமானதும் நீதியானதுமான காலவரையறைக்குள் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி 1981ஆம் ஆண்டிலிருந்த நிலைமைக்கு படைகளின் பிரசன்னத்தை மட்டுப்படுத்த வேண்டுமெனவும் இம்மாநாடு கோருகின்றது.

மேலும் வடக்கு, கிழக்கில் தொடர்ந்து அரசபடைகள் பாரிய எண்ணிக்கையில் ஆக்கிரமிப்புப் படைகளாக நிலை கொண்டிருப்பதையும் பாதுகாப்புப் படையினருக்கான செலவினங்கள் என்பது தமிழ், முஸ்லிம் மக்கள் மாத்திரமல்லாமல் சிங்கள மக்களையும் பாதிக்கும் என்ற வகையில் தேசிய பொருளாதாரத்தில் ஏற்படும் பாரிய தாக்கங்களையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கக் கூடாது என இம்மாநாடு கோருகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் 107பேர் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது முற்றாக நீதி விரோதமானது என்பதை சுட்டிக்காட்டுவதோடு யுத்தம் முடிவடைந்த பின்னரும் 12000ற்கும் மேற்பட்ட தமிழ் போராளிகளுக்கு மகிந்த ராஜபக்ச புனர்வாழ்வளித்து விடுதலை செய்ததையும் இதே சூழ்நிலையில் தற்போதுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாய்கம் பல்வேறு சாட்டுக்களை தெரிவித்து மனிதாபிமானமற்ற முறையில் இப்பிரச்சினைகளை கையாள்வதை கண்டிப்பதோடு காலதாமதமின்றி எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிகுள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு அரசாங்கத்தை கோருகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியே நின்று செயற்பட்டு வரும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக செயற்படுவதன் மூலமே ஒன்றுபட்ட தமிழ்த்தேசிய அரசியல் பலத்தினூடாக எம் இனத்தின் அரசியல் குறிக்கோளான அரசியல் சுதந்திரத்தை வென்றெடுக்க முடியுமென்பதை வலியுறுத்தியும் இம்மாநாடு இலங்கைத் தீவின் அரசியல் தீர்வாக ஒற்றுமை என்ற கட்டமைப்பிற்குள் எம் இனத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக உறுதியானதும் இறுதியானதுமான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத் தேவையை கருத்திற்கொண்டு அத்தகையதோர் அரசியற் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஓரணியாக அணிதிரள முன்வருமாறு தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி நிற்கின்ற சகல தமிழ் அரசியற் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கின்றது.

நியாயமானதும் யதார்த்தபூர்வமானதுமான கால வரையறைக்குள் எம் இனத்தின் அரசியல் குறிக்கோளான இலங்கைத்தீவின் அரசியல் தீர்வாக ஒருமைப்பாட்டிற்குள் வென்றெடுப்பது சாத்தியமல்லாதவிடத்து எமது பிரச்சினையை உலக அரங்கிற்குள் சமர்ப்பித்து சர்வதேச சட்டத்தின் கீழ் ஓர் தனித் தமிழ் தேசிய இனம் என்ற அடிப்படையில் எம் இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை ஓர் சர்வஜன வாக்கெடுப்பை தமிழினத்தின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் நடத்த வேண்டுமென்ற அரசியல் தீர்மானத்தை செயலாற்ற அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் முன்வர வேண்டுமென அம்மாநாடு அழைப்பு விடுக்கின்றது.

போர்க்குற்ற விசாரணை விடயத்தில் தமிழினத்தின் தரப்பில் எந்தவிதமான விட்டுக்கொடுப்பிற்கோ சமரசத்திற்கோ இடமில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கும் இத்தேசிய மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கை ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளையும் பொறுப்புகளையும் காலம்கடத்தாமல் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றம் வலியுறுத்தி உறுதிப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

மேலும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாட்டினையும் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தினையும் அமுல்படுத்த தவறினால் சர்வதேச விசாரணையை நடாத்த ஐக்கிய நாடுகள் சபை முன்வரவேண்டும் என இந்த மாநாடு ஐக்கிய நாடுகள் சபையினை கோருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top