இந்தோனேசியாவில் சுலவெசி தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பசி பட்டினியால் பரிதவித்து வருவதாகவும் கொள்ளை சம்பவம் பெருகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இதுவரை 1,350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கை மேலும் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கையானது இன்னும் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பேரழிவில் இருந்து மீண்ட சிறார்கள் உள்ளிட்ட இரண்டரை லட்சம் பேருக்கு உதவி தேவை என கூறப்படுகிறது. மருத்துவமனைகள் படுகாயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாகவும், பலுவில் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கொள்ளையில் ஈடுபடும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 35 பேரை இதுவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பேரழிவில் இருந்து மீள சர்வதேச உதவிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தாலும், இயற்கை பேரழிவு தொடர்ந்து மிரட்டும் இந்தோனேசியா போன்ற ஒரு நாடு, மீட்பு நடவடிக்கைகளை தாமாகவே மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பேரழிவில் தனித்துவிடப்பட்ட பல பகுதிகளுக்கும் இதுவரை மீட்பு குழுவினரால் இன்னும் சென்று சேர முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.



