சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேஷியா மக்களுக்கு பிரித்தானியா 6 மில்லியன் பவுண்ட் நிதி உதவி….

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேஷியாவிற்கு பிரித்தானியாவின் பேரழிவு அவசரக் குழு தொண்டு நிறுவனங்கள் திரட்டிய நிதி மூலம் 6 மில்லியன் பவுண்ட் கிடைத்துள்ளதாகவும், அதே சமயம் மகாராணி தனியாக தன்னுடைய நிதியை கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனிஷியாவில் சமீபத்தில் சுலாவெசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அங்கு சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய டோங்கலா நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டதால், நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக தற்போது வரை 1649-பேர் இறந்துள்ளதாகவும், 256 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளிலும், திறந்தவெளி இடங்களிலும் சடலங்கள் குவியல் குவியலாக சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளிலும், சேறு, சகதிகளிலும் குழந்தைகளின் சடலத்துடன் பலர் கதறி அழும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் இருளில் தவிக்கின்றனர். பலரும் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், திறந்தவெளியில் வைத்தபடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படி இயற்கை பேரழிவால் பயங்கரமாக அடிவாங்கியுள்ள இந்தோனேஷியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து உதவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பிரித்தானியாவில் பேரழிவுக்கான அவரசர குழு தொண்டு நிறுவனங்கள் இந்தோனேஷிய மக்களுக்காக நிதி திரட்டியுள்ளனர். அதில் ஒரு நாளில் மட்டும் 6 மில்லியன் பவுண்ட்(அதாவது இலங்கை மதிப்பில் 1,33,58,83,489 கோடி ரூபாய்) கிடைத்துள்ளதாகவும், அதே சமயம் பிரித்தானியா மகாராணி தனியாக தன்னுடைய நிதியை கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.