சுனாமி அலையில் அடித்துச் செல்லப்பட்ட மனைவி உயிர் பிழைத்தது எப்படி? கதறி அழுதேன் என கணவர் உருக்கம்

இந்தோனேஷியாவில் சுனாமி அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட மனைவியை இரண்டு நாட்கள் கழித்து கண்டதால் கணவர் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.
இந்தோனேஷியாவின் சுலவேசி என்னும் தீவுப்பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுலவேசி தீவின் வடமேற்குக் கடற்கரைப் பகுதியை சுனாமி பலமாக தாக்கியது. சுனாமி அலைகள் 20 அடி உயரத்துக்கு எழும்பி ருத்ர தாண்டவம் ஆடியதில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்றால், அது பலு நகரம் தான், அங்கு வசித்து வந்த மக்கள் இந்த தாக்கம் காரணமாக உறவினர்களையும், உடைமைகளையும் இழந்து நிற்கின்றனர்.
கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி இன்னும் தொடர்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் எனப் பலர் சாலைகளில் தங்கள் உறவினர்களை தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர்.

அப்படி பலு நகரத்தைச் சேர்ந்தவர் தான் அஸ்வின், இவர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட தன் மனைவியை கடந்த இரண்டு தினங்களாக, தன் மகளின் கையை பிடித்தவாறே சாலைகளில் சுற்றித் திரிந்தார்.
இரண்டு நாட்கள் தேடலுக்குப் பின்னர் சாலையோரக் கடையொன்றில் தன் மனைவியை உயிருடன் பார்த்து மகிழ்ச்சியில் கதறி அழுதார்.
சுனாமி அலையில் அடித்துச் செல்லப்பட்டதைக் குறித்து அஸ்னானின் மனைவி கூறுகையில், `நான் கடற்கரை ரிசார்ட்டில் வேலை பார்க்கிறேன்.

அன்று விழா ஒன்றுக்காகப் பெயர்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். திடீரெனக் கட்டடம் ஆடியது. சிறிது நேரத்தில் ராட்சத அலை என்னை அடித்துச் சென்றது. என்னைச் சுற்றி சுனாமி சுனாமி… என்னும் குரல்களும், கதறல் சத்தங்களும் கேட்டன.
நான் கண்களைத் திறந்து பார்த்தபோது ரிசார்ட்டுக்கு எதிரே இருந்த சாலையில் கிடந்தேன். என் ஆடைகள் கிழிந்திருந்தன. எல்லாத் திசையிலும் அழுகை சத்தம் மட்டுமே கேட்டன.
இருள் வேறு சூழ்ந்திருந்தது. அன்று இரவு குப்பைத்தொட்டி அருகிலேயே என்னையறியாமல் தூங்கிவிட்டேன். நான் சுனாமியில் உயிர்பிழைத்ததை இந்த நிமிடம்வரை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு இரண்டாவது பிறப்பு என்றே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

மனைவியை கண்டுபிடித்த கணவர் கூறுகையில், என் மனைவியைத் தேடி ரிசார்ட்டுக்குச் சென்றேன். அங்கு யாருக்குமே என் கேள்விக்கு பதில் அளிக்கக்கூட நேரமில்லை.
உடல்களை அப்புறப்படுத்தும் பணிகளில் மீட்புப் படை மும்முரம் காட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் உடல்களை பெரிய பிளாஸ்டிக் பைகளில் அடைத்துக்கொண்டிருந்தனர். என் இதயத்துடிப்பு அதிகரித்தது.

என் மனைவி இறந்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன், பிளாஸ்டிக் பைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தேன். ரிசார்ட்டுக்கு வெளியே வந்து சாலையோரங்களில் இருந்த உடல்களையும் பார்த்தேன். தலை சுற்றியது. தேடித்தேடி ஒரு கட்டத்தில் என் மனைவி இறந்திருப்பார் என்று எண்ணினேன்.

நான் தனியாக வீடு திரும்பியதும் என் உறவினர்கள் தேவி இறந்துவிட்டார் என்று அழுதனர். ஆனாலும் என் நம்பிக்கை குறையவேயில்லை. மறுநாளும் அந்த ரிசார்ட்டைச் சுற்றித் தேடினேன்.
சற்றுத் தொலைவில், ஒரு கடையின் வாசலில் என் மனைவி நிற்பதைப் பார்த்தேன். அதன் பின் கண்ணீர் விட்டுக் கதறினேன்.
என்னைப் போல பலர் தங்கள் உறவுகளைத் தேடி அலைவதைப் பார்த்தேன். அனைவருக்காகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
