போர் நிறைவடைந்தும் நாட்டின் பாதுகாப்புக்கு 30ஆயிரம் கோடி தேவையா?

தமிழர்களுக்கு ஆதரவாக வரும் வரவு செலவு திட்டத்தை தமிழத் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாக இருந்தால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மத்திய அரசின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டமையானது, இந்த பணத்தை கொண்டு இராணுவம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப வேலை திட்டங்களை செய்வதன் ஊடாக தமிழ் மக்கள் இராணுவத்துடன் நெருக்கமாக உள்ளார்கள் என படம் காட்டுவதற்கும்,
அதற்கும் மேலாக தமக்கு ஒதுக்கப்படும் பணத்தில் திட்டமிட்டு தமிழர் நிலங்களில் குடியேற்றப்படும் சிங்கள மக்களுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்கவும், தமிழர் நிலங்களில் பௌத்த விகாரைகளை அமைக்கவும், தமிழர் நிலங்களில் தங்களுடைய இராணுவ முகாம்களை விரிவுபடுத்தவும், இவ்வாறு தமிழர் விரோத செயற்பாடுகளை நிச்சயமாக இராணுவம் மேற்கொள்ளவுள்ளது.
இவ்வாறு தமிழர்களுக்கு விரோதமாக வரும் வரவு செலவு திட்டத்தை தமிழத் தேசிய கூட்டமைப்பு ஆதரிப்பதாக இருந்தால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும்.
2018ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்காக 29 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதுவே 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் வரவுள்ள நிலையில் அதில் 30 ஆயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
போர் நிறைவடைந்து 10 வருடங்களாகும் நிலையில் பாதுகாப்புக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தேவையா? இந்த பணம் உண்மையில் தமிழர் நிலங்களில் குடியேற்றப்படுகின்ற சிங்கள மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கும், தமிழர் நிலங்களில் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கும், இராணுவம் பௌத்த பண்டிகைகளை நடாத்துவதற்கும் மட்டுமே வழங்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப வேலை திட்டங்களையும் செய்து அதன் ஊடாக தமிழ் மக்கள் வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்துடன் நெருக்கமாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்ற படத்தையும் சர்வதேசத்திற்கு காட்டுவதே இந்த பாரிய நிதி ஒதுக்கீட்டின் நோக்கமாகும்.
ஏற்கனவே வடகிழக்கு மாகாண மக்களை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்கும் இராணுவம் பொய்யான படத்தை சர்வதேசத்திற்கு காண்பிப்பதற்கு இராணுவம் மற்றும் அரசாங்கம் விரும்புகிறது.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு விரோதமான 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை ஆதரிக்கபோகிறதா? என்பதே கேள்வி. அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவினை வழங்குமாக இருந்தால் கூட்டமைப்பு இதுவரை மக்களுக்கு கூறியவை அனைத்தும் பொய்யானவை.
அத்தோடு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் தாங்களே என கூறுவதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.