மகசின் சிறையில் போராட்டம் நடத்தும் 4 அரசியல் கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்து தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தங்களுக்கு எதிரான விசாரணைகளை விரைவுபடுத்துமாறும் கோரியும் கொழும்பு வெலிக்கடை சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 42 தமிழ் அரசியல் கைதிகளும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் நால்வரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.