News

மீண்டும் தவறிழைக்குமா கூட்டமைப்பு?

நல்லாட்சி அரசின் கதாநாயகர்களான ரணில் – மைத்திரி கூட்டை நம்பி முன்பு விட்ட தவறை மீண்டும் கூட்டமைப்பு நழுவ விடுமா? என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் அனைவர் மனங்களிலும் எழுந்துள்ளது.   நாட்டின் ஆட்சிப்பீடம் அதிர்ந்துகொண்டிருக்கின்றது. என்றுமில்லாதவாறு இரண்டு பிரதமர்கள் தற்போது நாட்டில் உள்ளார்கள். இவர்களில் சட்டத்துக்கு அமைய நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 எம்.பிக்களின் ஆதரவுத் தளம் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகள் தென்னிலங்கையை நம்பி ஏமார்ந்தமைதான் மிச்சம். ஆகவே, இந்தத் தருணத்தைச் சரியாகப் பயன்படுத்துமா? பயன்படுத்தவேண்டும் என்ற கேள்வியும் ஆதங்கமும் மக்கள் மத்தியில் உள்ளது.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால ஸ்ரீ சேனவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கினார்கள். தமிழ் மக்களிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரியைக் கைகாட்ட மக்கள் ஏகோபித்த ஆதரவு வழங்கி மைத்திரி ஜனாதிபதியாவதற்கு மூலகாரணர்கள் ஆனார்கள். அந்த இடத்தில் 2009 ஆம் ஆண்டு யுத்த தர்மத்துக்கு முரணாக பெரும் அழிப்பை மஹிந்த அரசு மேற்கொண்டிருந்தது. அந்த கொடிய அரசை மாற்றவேண்டும் என்பதற்காகக் கூட்டமைப்பின் அனைத்துக் கோரிக்கைக்கும் மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். அதற்குக் காரணம் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும், காணாமலாக்கப்பட்டோர் கண்டறியப்படவேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் , யுத்த குற்றமிழைத்தவர்கள் சர்வதேச மேற்பார்வையூடாகத் தண்டிக்கப்படவேண்டும். என்பதற்காகவே.மைத்திரி – ரணில் கூட்டுமீது நம்பிக்கை வைத்து தமது அவாக்கள் நிறைவேறும் என்று ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள். அந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடமும் மைத்திரியிடமும் சர்வதேச மத்தியஸ்தத்துதுடனான எழுத்துமூல உடன்படிக்கை மேற்கொண்டிருந்தால் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

ஆனால் அவர்களது எதிர்பார்ப்;புக்கள் எதுவும் நல்லாட்சி ஊடாக நிறைவேற்றப்படவில்லை. எமது தலைவர்களான  சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோரும் இந்த விடயத்தில் பெரும் முனைப்புடன் – ஆணித்தர உறுதியுடன் – விடாப்பிடியுடன் – செயற்பட்டிருப்பார்களாயின் இந்த நிலைமை வந்திருக்காது.. மைத்திரியும், ரணிலும் இவர்களுக்குக் கூறும் காலம்கடத்தும் செயற்பாடுகளை மட்டுமே எம்மிடம் தெரிவித்தார்கள். பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோர் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்கள் இருவருக்கும் உரிய நிவாரணங்கள் நல்லாட்சியால் வழங்கப்பட்டன. ஆனால், நாம் நிபந்தனையின்றி ஆதரவுகொடுத்து, ஆட்சி மலர்வதற்கு அத்திபாரமாக அமைந்தும் எமக்கு எந்த நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.

மீண்டும் பந்து இவர்களிடம் சென்றுள்ளது. யாருமே எதிர்பாராத வகையில் நாட்டின் ஆட்சிப்பீடம் அதிர்ந்துகொண்டிருக்கின்றது. என்றுமில்லாதவாறு இரண்டு பிரதமர்கள் தற்போது நாட்டில் உள்ளார்கள். இவர்களில் சட்டத்துக்கு அமைய நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 எம்.பிக்களின் ஆதரவுத் தளம் அமைந்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை ரணில் – மஹிந்த இருவரும் ஒன்றுதான். இப்போ இத்தருணத்தை சரியாகப் பயன்படுத்தி, இவர்களிடத்தில் வந்த பந்தை கனகச்சிதமாய் நகர்த்தி, தீர்வு எனும் ஹோலை அடிப்பார்களா நம் தலைவர்கள்?

இந்த தீர்வுக் ஹோலை சரியாக நகர்த்துவதற்கு சிங்கள தேசத்தை நம்பிப் பயனில்லை. ஐக்கிய நாடுகள், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் முன் ஓர் எழுத்துமூல ஒப்பந்தத்தை மேற்கொண்டு மஹிந்த – ரணில் இருவரில் எவர் எமது கோரிக்கைகளுக்குச் சம்மதிக்கிறார்களோ – நான் ஆரம்பத்தில் மைத்திரிக்கு ஆதரவு கொடுக்க தமிழ் மக்களிடம் இருந்த அவாக்களைக் குறிப்பிட்டேன். அவற்றை யார் நிறைவுசெய்கின்றார்களோ – அவர்களுக்கு ஆதரவு கூட்டமைப்பு வழங்கலாம். தவறின் கூட்டமைப்புத் தலைவர்களுடன் மக்களும் ஏன் ஒட்டுமொத்தத் தமிழினமும் காட்டாற்றால் அடித்துச்செல்லப்படுவர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top