News

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் நோக்கி நடைபவனி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபவனியை நேற்று செவ்வாய்க்கிழமை (09) காலை ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் தீர்மானத்தினூடாக அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், அரசியல் கைதிகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் இந்த நடைபவனி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் நடைபெற்ற விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து மாணவர்களின் நடைபவனி ஆரம்பமானது.

திருநெல்வேலி இராமநாதன் வீதியூடாக பலாலி பிரதான வீதியைச் சென்றடைந்த நடைபவனி, அங்கிருந்து ஏ 09 பிரதான வீதியைச் சென்றடைந்து யாழ். மாவட்ட செயலகம் ஊடாக தென்மராட்சியைச் சென்றடைந்தது.

இந்த நடைபவனியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன், மாணவர் ஒன்றியச் செயலாளர் க. ஜாக்சன் லீமா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நடைபவனியில் கலந்து கொண்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு பதாகைகளைத் தமது கைகளில் ஏந்திச் சென்றனர்.

நடைபயணத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளதுடன் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான குழுவினரும் நடைபவனியில் பங்கேற்றுள்ளனர்.

இந் நடைபவனியில் கலந்து கொண்டுள்ளவர்கள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பயணமாகி கிளிநொச்சி, வவுனியா ஊடாக அனுராதபுரம் சிறைச்சாலையைச் சென்றடையவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top