லண்டனில் வடக்கு ஆளுநரின் சந்திப்புகளுக்கு எதிர்ப்பு! – கைவிடப்பட்ட கூட்டங்கள்

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே லண்டனில் தமிழ் மக்களுடன் நடத்த திட்டமிட்ட சந்திப்புகள், புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளன. எனினும் கைவிடப்பட்ட சந்திப்புக்களை, வேறு இடங்களில் சந்திப்புக்களை ஒழுங்கு செய்ய ரெஜினோல்ட் குரே தரப்பு தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
வடமாகாண சபையின் ஆட்சிக்காலம் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் அதற்குப்பின்னர் வடமாகாணத்தில் தனது பிடியை இறுக்கி ஆளுனர் குரே அரசியல் செய்யத் தயாராவதாக வடமாகாணசபையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவரது லண்டன் சந்திப்புக்களும் சவால்களை எதிர்நோக்கியுள்ளன. ஹரோ ரெயினஸ்லேன் பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று பிற்பகலில் ரெஜினோல்ட் குரே நடத்த இருந்த சந்திப்பு கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேபோல நாளை லூசிஷயம் பகுதியில் ரெஜினோல்ட் குரே நடத்தவிருந்த சந்திப்பு ஒன்று தமிழ்மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் கைவிடப்பட்டதாகவும் தெரியவருகிறது. எனினும் மாற்று இடங்களில் சந்திப்புக்களை ஒழுங்கு செய்வதற்கு ரெஜினோல்ட் குரே தரப்பு முயன்று வருகிறது.