2 வாரங்கள் கூட சவுதி மன்னரால் பதவியில் நீடிக்க முடியாது! சர்ச்சையை ஏற்படுத்திய டிரம்ப்

அமெரிக்கா இல்லாமல் சவுதி அரேபிய மன்னரால் இரண்டு வாரங்களுக்கு பதவியில் நீடிக்க முடியாது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக, ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவிதம் முடங்கியுள்ளது.
இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரித்ததுடன், விலையும் உயர்ந்து வருகிறது. எனவே சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், இந்த வேண்டுகோளை சவுதி அரேபியா ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால் டிரம்ப் கோபமடைந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில்,
‘சவுதி அரேபியா பல ஆண்டு காலமாக அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. மேற்காசியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பல்வேறு பிரச்சனைகளிலும் அமெரிக்காவுடன் கரம் கோர்த்து செயல்பட்டு வருகிறது.
ஆனால், கச்சா எண்ணெய் விவகாரத்தில் சவுதி அரேபியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது கவலையளிக்கிறது. அந்நாட்டின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பையும் அமெரிக்கா எடுத்துக் கொண்டுள்ளது.
அமெரிக்கா இல்லாமல் சவுதி அரேபியாவில் நாட்டை பாதுகாக்க முடியாது. நாங்கள் இல்லாமல் அந்த நாடு நீடித்து இருக்க முடியாது. சவுதி மன்னன் சல்மான் பின் அப்துலஸிஸ் எனக்கு நல்ல நண்பர் தான்.
ஆனால், அமெரிக்கா இல்லாமல் இரண்டு வாரங்களுக்கு கூட அவரால் சவுதி மன்னர் பதவியில் நீடிக்க முடியாது’என தெரிவித்துள்ளார். இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.