55 ஆண்டுகளுக்கு பின் நோபல் பரிசு வென்று கனடா பெண் விஞ்ஞானி சாதனை

கனடாவைச் சேர்ந்த இயற்பியல் பெண் விஞ்ஞானியான டோனா ஸ்டிரிக்லாண்ட், அரை நூற்றாண்டுக்கு பிறகு நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி எனும் பெருமையை பெற்றுள்ளார்.
ஸ்வீடனில் உள்ள நோபல் பரிசுக்குழுவினர் 2018ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினை அறிவித்துள்ளனர்.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கனடாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லாண்ட் இடம்பெற்றுள்ளார்.
இவருக்கும், பிரான்ஸ் விஞ்ஞானி ஜெரார்டு மோரோவிற்கும் கூட்டாக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் லேசர் கற்றையை மிக மிக நுண்ணிய அளவில் உருவாக்கியதற்காக இந்த பரிசினை பெறுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம், எதிர்காலத்தில் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு கண் அறுவை சிகிச்சையை எளிதில் மேற்கொள்ள முடியும்.
கனடா விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லாண்ட், கனடாவின் ஒண்டாரியோ நகரில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 55 ஆண்டுகளுக்கு பின்னர் இயற்பியல் பிரிவில் நோபல் பரிசினை பெறுபவர் இவர் தான்.
இவருக்கு முன்னர் 1963ஆம் ஆண்டில் மரியா ஜோபர்ட் இந்த பரிசை வென்றிருந்தார். இந்நிலையில், விருது குறித்து டோனா ஸ்டிரிக்லாண்ட் கூறுகையில்,
‘அரை நூற்றாண்டுக்கு பின், இயற்பியல் துறையில் பெண் விஞ்ஞானி ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது கொண்டாப்பட வேண்டியது.
பெண்கள் சாதிப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது. இனி நம்பிக்கையுடன் மிக வேகமாக முன்னோக்கி செல்ல வேண்டும். பெண்ணாக எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.