வடகிழக்கில் மீண்டும் மாபெரும் யுத்தம் வெடிக்கும்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமானால் அது வடகிழக்கில் மாபெரும் யுத்தமாக வெடிக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கடந்த 2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வில்லை.
ஒரு சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட போதிலும் அனுராதபுரம் உட்பட பல சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதர் உட்பட நல்லாட்சி அரசாங்கத்திடம் கோரிக்கைகள் விடுத்தபோதிலும் தொடர்ச்சியாக இவர்களின் விடுதலை என்பது இழுத்தடிக்கப்பட்டே வருகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்படவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி தொடர்ந்து மௌனமாகவே இருந்து வருகின்றார்.
அண்மையில் நடைபெற்ற வடகிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்திலும் வடகிழக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ள போதிலும் ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தில் மென்மையான போக்கினையே கடைப்பிடிக்கும் நிலையினை காணமுடிகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஒரு இழுத்தடிப்ப நிலையே நல்லாட்சியில் நடக்கின்றது.
இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியவர் ஜனாதிபதி. ஜனாதிபதி இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்காக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும்.
அவ்வாறு விடுதலைசெய்யாது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் யாருக்காவது உயிர் ஆபத்துகள் ஏற்படுமானால் வடகிழக்கிலே அது பாரிய யுத்தமாக வெடிக்கும்.
அதில் மாற்று கருத்து இல்லை. இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் கூறினார்.