News

சுவிஸ் சோசலிச கட்சி தமிழர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !

சுவிற்சர்லாந்து மக்கள் கட்சியினால் சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட மசோதாவினை இல்லை என்று நிராகரிப்போம் என்று சுவிஸ் சோசலிச கட்சியின் சார்பாக சுதாகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

உலகநாடுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் எதேச்சதிகார அரசியல்வாதிகள் தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கு தமது நாட்டின் இறைமை என்ற பெயரில் சர்வதேச உடன்படிக்கைளையும் ஒப்பந்தங்களையும் நிராகரித்து வருகின்றனர்.

சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி இந்நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களிற்கு எதிராகவும் அகதிகளிற்கு எதிராக கடுமையான சட்டமூலங்களை தொடர்ச்சியாக கொண்டு வருகின்றது.

பலர் இதன் தாற்பரியங்களை பற்றி அறிந்து கொள்ளாது நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளிற்கு தனியே வெளிநாட்டவர்களும் அகதிகளுமே காரணம் என முடிவுக்கு வர முற்படுகின்றனர்.

இவ்வகையான மிக மலிந்த அரசியலை செய்து சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி சுவிற்சர்லாந்து பிரஜைகள் மூளை சலவை செய்து வருகின்றது.

இதற்கு ஓர் ஊன்று கோலாக தமது நாட்டின் இறைமையை கையில் எடுத்து கொள்கின்றனர். சுவிற்சர்லாந்து சர்வதேச அல்லது ஐரோப்பிய உடன்படிக்ககைளிலும் ஒப்பந்தங்களிலும் கையொப்பம் இட்டதனாலேயே 1970 ம் ஆண்டு சுவிற்சர்லாந்து பெண்களுக்கான வாக்குரிமை சாத்தியமானதிற்கு ஓர் காரணம்.

சுவிற்சர்லாந்து வாழ் பெண்களின் போராட்டமும் முக்கிய பங்காற்றியுள்ளன என்பதை மறுக்கவில்லை.

வெளிநாட்டு நீதிபதிகளின் தீர்ப்புக்களிற்கு தாம் அடிபணிய போவதில்லை என சொல்லியே இம் மசோதாவினையும் சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி முன்மொழிந்துள்ளனர்.

ஐரோப்பிய மனித உரிமை சட்டங்கள் ஒப்பந்தங்கள் முக்கியமற்றது என இந்த மசோதா நிராகரிக்கின்றது.

1970களில் Asbest எனப்படும் கூரைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பல தொழிலாளர்கள் புற்று நோய்க்கு உட்பட்டனர்.

இத்தொழிற்சாலையினால் பாதிக்கப்பட்டு நோய்வாய்பட்ட பல தொழிலாளர்கள் இந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சுவிற்சர்லாந்து நீதிமன்றங்கள் தொழிற்சாலை உரிமையாளர்களிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியிருநதனர்.

மேலும் தொழிலாளர்கள் இவ் வழக்கினை ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஐரோப்பிய நீதிமன்ற நீதிபதிகள் தொழிலாளர்களின் உண்மை நிலையை அறிந்து தொழிலாளர்களிற்கு நியாயமான நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் மேலும் இப்பொருள் தயாரிப்பு மனிதர்களின் சுகாதாரத்திற்கு உகந்தது அல்ல எனவும் தீர்ப்பளிக்கபட்டது.

இவ்வகையில் வழக்கு தொடுப்பவர் தனக்கு சரியான நீதி கிடைக்கும் வரைக்கும் சர்வதேச ஐரோப்பிய நீதிமன்றில் மேல் முறையிடும் வாய்பை முற்றாக தடைசெய்வதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.

சிறிய நாடான சுவிற்சர்லாந்து சர்வதேச நட்புறவும் உடன்படிக்கைமற்று செயல்பட முடியாது. இம் மசோத இந்நாட்டில் முதலீடு செய்து வேலைவாய்ப்பினை கொடுக்கும் நிறுவனங்களிற்கு நெருக்கடிகளை கொடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

சுவிற்சர்லாந்தில் தஞ்சம் அடைந்த தமிழ் அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்ட பொழுது உண்மையில் திருப்பி அனுப்பப்பட்டால் உயிருக்கு ஆபத்து என கருதிய தமிழ் அகதி ஐரோப்பிய நீதிமன்றில் மேல்முறையிட்டு சதாகமான தீர்ப்பு வழங்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்கள்.

இலங்கையில் கலப்பு விசாரணையை சர்வதேசம் வலியுறுத்திய போது இலங்கை அரசு கூறிய பதில், இது எங்கள் நாடு எமது இறமை எமது நீதிமன்றங்கள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் என தெரிவித்து சர்வதேச அழுத்தத்தில் இருந்து தப்பித்து கொண்டது.

அதே போல் இன்று பாரிய முதலீட்டில் செயற்படும் சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி இந்நாட்டு நீதிமன்றங்களே போதுமானது என இம் மசோதா மூலம் வலியுறுத்துகின்றது.

பெண்கள் சிறுவர்கள் மதங்கள் பாலியல் சிறுபாண்மையினர் பிரதேசம் இனம் சாதி போன்ற பல்வேறு கூறுகளால் ஒடுக்கப்படும் மக்களிற்கு பாதுகாப்பளிக்கும் வகையிலும் உயரிய மனித விழுமியங்களை பாதுகாக்கும் வகையிலுமே ஐரோப்பிய சர்வதேச சட்டங்கள் இயற்றபட்டுள்ளன.

சுவிற்சர்லாந்து அரசியல் யாப்பிலும் இவ்விடயங்கள் மிக அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் மேல்முறையிடு செய்யும் உரிமையினை மறுப்பதினால் இம் மசோதா சுவிற்சர்லாந்தின் உயரிய மனித உரிமை விழுமியங்களுக்கு எதிரானது என மனித உரிமையை மதிக்கும் சிவில் அமைப்புக்கள் விமர்சிக்கின்றன.

இந்நாட்டில் பிரசைகள் உரிமையினை பெற்ற தமிழர்கள் தயவு செய்து உங்களிற்கு கிடைத்துள்ள வாக்குரிமையை பயன்படுத்தி இந்த மசோதாவிற்கு எதிராக இல்லை என வாக்களியுங்கள்.

சுவிற்சர்லாந்தில் வாக்களிக்கும் விகிதம் கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்து வந்துள்ளது. இதனால் அக்கறையுடன் வாக்குரிமையை பெற்ற அனைவரும் வருகின்ற 25ஆம் திகதி நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அபிப்பிராய வாக்கெடுப்பில் கலந்துகொண்டு இல்லை என வாக்களிக்குமாறு சோசலிச ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டு கொள்கின்றோம் என்றும் சுவிஸ் சோசலிச கட்சியின் சார்பாக சுதாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top