News

தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்தத் தவறின் நாடு அழியும்! – லால் விஜேநாயக்க

சிறிலங்காவில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் சாசனம் மிகவும் பலவீனமானது என்பது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் நிரூபணமாகியுள்ளதாக அரசியல் சாசன நிபுணரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் நாட்டின் ஜனநாயகத்திற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் எந்தவித பயனுமற்ற தற்போதைய அரசியல் சாசனத்தை தூக்கி எறிந்துவிட்டு புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை நாட்டு மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ள சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க, இந்த கடமையை நாட்டு மக்கள் செய்யத் தவறினால் நாடு மோசமான அழிவை சந்திக்க நேரிடும் என்பதுடன், சர்வதேச சமூகத்தினால் முழுமையாக ஓரம்கட்டப்பட்டுவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் குழப்ப நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே புதிய அரசியல் யாப்புதொடர்பில் மக்கள் கருத்துக்களை அறியும் குழுவின் தலைவராக கடமையாற்றியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

இது தெட்பில் அவர் தெரிவிக்கையில்: “நாட்டின் மீயுயர் கடடமைப்பாக கருதப்படும் நாடாளுமன்றத்துடன் விளையாடுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. இதுமிகவும் பயங்கரமான நிலையாகும். இந்த அரசியல்

அமைப்பானது சதத்திற்கும் பிரயோசனம் இல்லாத ஒன்றாகும். அதனால் இதனை உண்மையாகவே தூக்கியெறிய வேண்டும். குறிப்பாக நாட்டின் அரச தலைவரே அரசியல் சாசனத்தை மதித்து அதனை அடிப்படையில் செயற்படத் தயார் இல்லையேல் அதனை நிச்சியம் தூக்கி வீச வேண்டும்.

நாட்டுக்கு தீவைத்து விட்டு செல்லவே மைத்ரிபால சிறிசேன ஆயத்தமாகின்றார். அதனால் நாம் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பது அவசியமாகவும். அத்தோடு எமக்கு புதியதொரு அரசியலமைப்பு அவசியமானதாக காணப்படுகின்றது. தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் சாசனம் மிகவும் பலவீனமானதாகும் என்பது நிரூபணமாகியுள்ளது. அதனால் அதிலுள்ள குறைபாடுகளை சரிசெய்து புதிய அரசியலமைப்பினை உருவாக்கி முன்னோக்கி செல்ல அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நாம் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்.”

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் எடுத்துவரும் தீரமானங்கள் அனைத்தும் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று தெரிந்தும் அவற்றை நியாயப்படுத்த அரசியல் சாசன நிபணரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸே நியாயப்படுத்த முற்பட்டுள்ளதாகவும் லால் விஜே நாயக்க குற்றம்சாட்டினார்.

“நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயற்பாட்டினை அரசியல் யாப்பு தொடர்பான நிபுணரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸே நியாயப்படுத்த முற்பட்டமை துர்பாக்கியமான நிகழ்வாகும். குறிப்பாக அரசியலமைப்பிற்கு உட்பட்டே ஜனாதிபதி இதனை மேற்கொண்டார் என்றும், இது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றும் பல கருத்துக்களை முன்வைத்தார். எனினும் சில தினங்கள் கழித்து அரசியலமைப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பின் கீழ் இது சட்டவிரோத செயல் ஆனால் சிங்கள மொழிபெயர்ப்பின் கீழ் இது சட்டவிரோத செயல் அல்ல என புதுக்கதையொன்றை அவிழ்த்துவிட்டார். அவ்வாறான நிலையில் ஆங்கிலத்திலுள்ள ஒரு சரத்து சிங்களத்தில் இல்லாமை இங்கு தெளிவாகின்றது. இங்கு மொழி பெயர்ப்புக்கள் விளக்கத்தின்

அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். அதனால் அவ்வாறான அர்த்தப் படுத்தலை மையப்படுத்தி பிரதமர் ஒருவரை பதவி நீக்க முடியாது என மிகத் தெளிவாக குறிப்படப்பட்டுள்ளது. ஆனால் 19 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இருந்தது. அதேபோலவே 19ஆம் அரசியலமைப்பிற்கு முன்னதாக நாடாளுமன்றினை கலைப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. அதாவது நாடாளுமன்றம் அமையப்பெற்று முதலாம் வருடத்தில் மாத்திரம் நாடாளுமன்றினை கலைக்க முடியாதெனவும் அதன் பின்னர்

முடியுமெனவும் காணப்பட்டது. அதனையும் மாற்றவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், முதல் நான்கு ஆண்டுகள், ஆறு மாதங்கள் கழித்த நிலையில் நாடாளுமன்றினை கலைக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டு ஜனாதிபதியின் அதிகாரம் இங்கு குறைக்கப்பட்டது. அவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கு முதல் நான்கரை வருடங்களுக்கு நாடாளுமன்றினை கலைக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் அரசியல் சாசனத்தினை மாற்றியமைத்தது ஏன்? இது குறித்து உயர் நீதிமன்றத்திடம் செல்லுகின்ற நிலையில் அவர்கள் அதன் அர்த்தத்தினையே அவதானிப்பார்கள். இது தொடர்பில் எந்தவொரு சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் உத்தரவு ஒரு சட்டவிரோதமான செயலாகும்”.

இதேவேளை தற்போது பேசுபொருளாக மாறியுள்ள நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்ரியின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பது உச்ச நீதிமன்றில் நிரூபணமாகிவிடும் என்றும் லால் விடீஜநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்: “ ஜனாதிபதி ஒருவருக்கு நாடாளுமன்ற அமர்வினை இரண்டு மாத காலத்திற்கு ஒத்திவைக்க முடியும். ஆனால் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் நாடாளுமன்றினை ஜனாதிபதி அதிரடியாக ஒத்திவைத்தார். இது இந்த ஆண்டிற்கான அமர்வினை முடித்ததற்கு சமமானதாகும். இவ்வாறு செயற்பட முடியுமா?. எமது நாட்டிலுள்ள நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஜனாதிபதி ஒருவர், பிரதமர் மற்றும் சபாநாயரிடம் கலந்துரையாடிய பின்னரே நாடாளுமன்ற அமர்வினை முடிவிற்கு கொண்டுவருதல் வேண்டும்.

நாடாளுமன்றினை நடாத்திச் செல்வதற்கென ஒரு முறை உள்ளது. அதனைவிடுத்து ஜனாதிபதி நினைத்ததைப் போல நாடாளுமன்றினை நடாத்த முடியாது. புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தவிற்கு நாடாளுமன்றில் தேவையான பெரும்பான்மையை திரட்டிக்கொள்ளவே நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்திருந்தார். இதுவும் சட்டவிரோத செயற்படாகும். சட்டத்தினை இவ்வாறு தவறாக பயன்படுத்தி அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாட்டினை செய்த ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணையினை கொண்டுவருவதற்கு நல்லதொரு வாய்ப்பு இருந்தது. இதனைத் தடுக்க பெருந்தொகைப் பணத்தினை வாரி இறைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்ய ஜனாதிபதி முயற்சிப்பாராயின் இந்த நாட்டில் எவ்வாறானதொரு நிலமை தோற்றம்பெறும் என்ற கேள்வியும் எழுகின்றது.

ஆனால் அவ்வாறு முயற்சித்தும் 113 எனும் பெரும்பாண்மையினை அமைத்துக் கொள்ள முடியாதுபோனது. அன்றே அந்தபெரும்பாண்மை இருந்திருக்குமானால் நாடாளுமன்றினை அவர் கூட்டியிருப்பர். இவ்வாறு மைத்திரி ஏற்படுத்திய அரசியல் குழப்பத்தினால் கடந்த 26 ஆம் திகதி முதல் நாட்டில் பாரிய அழிவொன்று ஏற்பட்டுள்ளது. அதனை பணப் பெறுமதியினால் மாத்திரம் அளவிடமுடியாது. பொருளாதார ரீதியிலும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமரை இதுவரையிலும் எந்தவொரு உலக நாடும் வாழ்த்துத் தெரிவிக்க முன்வரவில்லை. அவர்கள் இங்கு இடம்பெற்றது அரசியல் சாசனத்திற்கு முரணான செயல் என்பதனை அறிவார்கள்”. என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top