News

நாடாளுமன்ற விவகாரம் தொடர்பில் மேற்குல நாடுகள் கவலை!

இலங்கை நாடாளுமன்றில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற கைலப்புக்கள் தொடர்பில் அமெரிக்கா, ஜேர்மன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றன.

இலங்கை அரச தலைவரினால் அதிரடியாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் சபாநாயகர் கரு ஜயசூரியவை முற்றுகையிட்டு தாக்க முற்பட்ட போது அதனை தடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர் கட்சிகளால் நேற்று முன்தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்றம் கூடிய போது, தானே பிரதமர் என்று குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திலுள்ள பிரதமருக்கான ஆசனத்தில் இருந்தவாறு விசேட உரையை ஆற்றுவதற்கு ஆரம்பித்தார்.

எனினும் இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு தடுப்பதற்காக தொடர்ச்சியாக கூச்சலிட்டு பெரும் களேபரத்தை ஏற்படுத்தினார்கள்.

எனினும் சபாநாயகர் கரு ஜயசூரிய, அவை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறி, மஹிந்த ராஜபக்சவுக்கு அவரது உரையை ஆற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ச்சியாக கூச்சலிட்டு தடை ஏற்படுத்தினர். ஆனால் இந்த குழப்பங்களுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ச தனது உரையை முடித்துக்கொண்ட போது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தும்படி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.

இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க முற்பட்ட போது அவரது ஆசனத்தை முற்றுகையிட்டு சபாநாயகர் கரு ஜயசூரியவை தாக்க முற்பட்டனர். இதன் போது மஹிந்தவாதியான இந்திக்க அநுருத்த ஹேரத் கூப்பைக் கூடையை சபாநாயகரை நோக்கி எறிந்தார். எனினும் அதிலிருந்து சபாநாயகர் தெய்வாதீனமாக தப்பினார்.

இதன்போது உடனடியாக சபாநாயகரை சுற்றுவளைத்துக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மஹிந்தவாதிகள் முரண்பட்டனர் இதன்போது கைகலப்பும் இடம்பெற்றது. இந்த நிலையில் சபாநாயகரின் ஒலிவாங்கியை பிடுங்கி எறிய மஹிந்தவாதியான திலும் அமுனுகம முற்பட்டார். இதனால் ஏற்பட்ட இழுபறியில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவைக்குள் கத்தியொன்றுடன் வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மஹிந்தவாதிகளைத் தாக்க பாய்ந்தார். எனினும் அவரை தாக்கவிடாது ஐக்கிய தேசியக் கட்சியினரே தடுத்தனர். எனினும் அவர் கத்தியுடன் இருக்கும் காணொளிகளும், நிழல் படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து வைரலாக பரவி வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இந்த கைகலப்பிற்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டும் என்று மஹிந்த – மைத்ரி அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டினார்.

“ கத்திகள் மூலமே காயம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. இது ஜனநாயக செயற்பாடல்ல. அவ்வாறு ஜனநாயகம் இருக்குமாயின் தயவு செய்து தனக்குள் பெரும்பாண்மை இருப்பதை உறுதுிசெய்யும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதியிடம் கையளியுங்கள் என ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

அப்போது அவர் அதற்கான முடிவொன்றினை எடுப்பார். எனினும் நாடாளுமன்றில் ரணிலிற்கு பெரும்பாண்மையான வாக்குகள் இல்லை. எனினும் ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களினது வாக்குகளையே அவர் காண்பித்து வருகின்றார். அவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகவோ, மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகவோ செயற்பட தயாராக இல்லை. இவ்வாறான நிலையில் சபாநாயகரினால் நாடாளுமன்ற சம்பிரதாயம் அப்படடமாக மீறப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது”.

எனினும் நாடாளுமன்றத்துக்குள கூரிய ஆயுதங்களைக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது சக உறுப்பினர்கள் மீது தாக்கி காயப்படுத்தியதாக மஹிந்த தரப்பினர் சுமத்திய குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நிராகரித்தார்.

“ஆயுதங்களை யாரும் கொண்டு வரவில்லை. பொலிஸாரே அது தொடர்பில் விசாரணைளை மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கூரிய ஆயுதததால் காயமடைந்தாரா அல்லது சபாநாயகரின் ஒலிவாங்கியை உடைக்கசென்று காயமடைந்தாரா என்பது அங்கிருந்த கமொராக்களில் பதிவான காட்சிகள் ஊடாக அறிந்துகொள்ளமுடியும்”

நேற்றைய (15) தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் 21 ஆம் திகதி கூடும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் நாளைய தினம் (16) பிற்பகல் 1.30 க்கு கூட்டுவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top