News

மஹிந்தவின் திட்டத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி! அதிர்ச்சியில் உறைந்த அரசியல்வாதிகள்…

தற்போது நாடாளுமன்றில் நடைபெறும் அனைத்து விதமான அசம்பாவிதங்களின் பின்னணியிலும் சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகள் முறையாக நடைபெற்று, தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அவரின் பதவி பறி போகும் அவல நிலை ஏற்படும்.

அவ்வாறானதொரு சம்பவம் நிகழுமாயின் மஹிந்த ராஜபக்ஷவின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கைக்கும் பேரிடியாக மாறும். இதன் காரணமாக வாக்குகெடுப்பு நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறான அசாம்பாவித சம்பங்களை உருவாக்கி வருகின்றனர்.

கடந்த 26ம் திகதி அதிரடி நடவடிக்கையாக பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக தெரிவு செய்தார்.

இதன் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைகள், பேரம் பேசுதல் போன்ற விடயங்கள் சூடு பிடித்திருந்த நிலையில், யார் சட்டபூர்வமான பிரதமர் என்ற பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினருக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். ஜனாதிபதியும் இதற்கு பச்சைக்கொடி காட்டியிருந்தார்.

எனினும் பலமான கூட்டணியுடன் இருந்த ரணிலின் கோட்டையை உடைத்து, அங்குள்ள துருப்புகளை தம்வசம் இழுக்கும் முயற்சியில் மைத்திரி – மஹிந்த தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். எனினும் அந்த முயற்சி பெரும் தோல்வியில் முடிவடைந்தது.

பெருந்தொகை பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருசில உறுப்பினர்கள் மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட போதும் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இது மஹிந்த தரப்புக்கு மட்டுமன்றி ஜனாதிபதிக்கும் பாரிய தோல்வியாக கருதப்படுகின்றது.

இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் நாடாளுமன்றதை கலைத்து பொதுத் தேர்தலுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். எனினும் அது அரசியல் யாப்புக்கு முரணான வகையில் ஜனாதிபதி செயற்பட்டதாக பலரும் குற்றம் சாட்டினர்.

19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய ஐந்து வருட ஆயுட்காலத்தை கொண்ட நாடாளுமன்றம் நான்கரை வருடங்களை கடந்த நிலையிலேயே அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவொரு பாரிய சட்டச் சிக்கலாக மாறிய நிலையில், பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து உயர் நீதிமன்றின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள முயற்சித்தனர்.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 17 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் அடங்கும்.

ஜனாதிபதிக்கு எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் எதிர்வரும் 3ம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு வழங்கியது. இதன் காரணமாக ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியிட்ட வர்த்தமானி செல்லுபடியற்றதாக மாற, மீண்டும் நாடாளுமன்றம் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவ்வாறு நாடாளுமன்றம் கூட்டப்படுமாயின் அங்கு பெரும்பான்மை நிரூபிக்கப்படாத பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி கவிழ்க்கப்பட்டு, மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கும் சூழல் ஏற்பட்டது.

இந்த நடவடிக்கையை முறியடிக்கும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகளின் போது வன்முறையை ஏற்படுத்தி, காலத்தை கடத்துவதே மஹிந்த தரப்பின் திட்டமாக மாறியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 4ம் 5ம் 6ம் திகதிகளில் ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான மனுக்கள் மீளவும் விசாரிக்கப்படவுள்ளன. இதன்போது கடும் அழுத்தம் ஒன்றை பிரயோகித்து ஜனாதிபதிக்கு ஆதரவான தீர்ப்பினை பெற மஹிந்த தரப்பு பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் 9 அல்லது 11 நீதிபதிகள் அடங்கிய குழுவினால் குறித்த மனுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கான முன்னாயத்தங்களை முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேற்கொண்டு வருகின்றார்.

மறுபக்கம் நாடாளுமன்றத்தில் குழப்பங்கள், வன்முறைகளை ஏற்படுத்தி சபாநாயகருக்கு உளவியல் பிரச்சனைகளை கொடுப்பதே அடுத்த திட்டமாக உள்ளது. கடந்த இரண்டு அமர்வுகள் வன்முறைகளுடன் அமர்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமலே நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சாதக நிலைப்பாட்டினை தான் மஹிந்த தரப்பினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாடாளுமன்ற பின்னடைவுகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த பாரிய வெற்றியாக அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய குழுவுக்கு மஹிந்தவின் மிகவும் நெருங்கிய நண்பரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமை தாங்குகிறார். அவரின் தலைமையில் கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் சதி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அடுத்து வரும் நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 23ம் திகதி நடைபெறும் என பிரதி சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும் பெரும் வன்முறைகளை ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவ்வாறான குழப்பகரமான நிலைமைகளை தனக்கு சாதகமாக கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top