News

ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் முகத்தில் கரிபூசிய சிறிலங்கா : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் !

ஜெனரல் சில்வாவைப் பதவியலமர்த்துவது அமைதிக்கும் நீதிக்குமான செயல்வழியை சாகடிக்கக் கூடும் என்பதோடு, தமிழர்தம் உயிருக்கு அச்சுறுத்தலை மேலும் அதிகப்படுத்துவதாகும்.

சிறிலங்கா ஏற்கெனவே பன்னாட்டு சமூகத்தின் நம்பிக்கையை காப்பாற்றத் தவறிவிட்டது என்பதால், இதற்கு மேல் காலநீட்டிப்பு ஏதும் தரக் கூடாது சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பாரப்படுத்த வேண்டும்”— பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் .

சிறிலங்கா இராணுவத்தின் 53வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது ஐ.நா மனித உரிமைச்சபையின் முகத்தில் அடித்தாற்போல் உள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத்தீவின் போரின் போது எதிரான பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதற்கும், காணாமல்லாக்கப்பட்டவதிலும் முக்கிய பங்கு வகித்தவர் என பல ஐநா அறிக்கைகளும்பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளிலும் உள்ள இனவழிப்புப் போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவேந்திர செல்வா சிறிலங்காவின் புதியப் படைத் தலைமை அதிகாரியாக அமர்த்தப்பட்டிருப்பதானது வன்மையாகக் கண்டிக்கதக்கதெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றம் ஆகியன தொடர்பில் சிறிலங்கா தன்னைத்தானே புலனாய்வு செய்து கொள்ள முடியும் என்பதனை சென்ற மாதத்தில் சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்களை மெய்ப்பிப்பதாக யாரேனும் கருதினால், மனிதத் தன்மையற்ற இந்தக் கொடுங்குற்றங்களுக்குப் பெரிதும் பொறுப்பானவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் சில்வாவைப் பதவியில் அமர்த்தியிருப்பது இந்தக் கருத்தைப் பொய்ப்பிப்பதாக உள்ளது’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்:

நீதியை நிலைநாட்ட எமக்குப் பன்னாட்டுப் புலனாய்வும் வழக்குத் தொடுப்பும் தேவைப்படுவதற்கான காரணங்களின் நீண்ட பட்டியலில், ஐநா அறிக்கைகளின் படியே மேஜர் ஜெனரல் சில்வாதான் போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் பன்னாட்டு நேரிருப்பே இல்லாமல் செய்தமைக்குப் பொறுப்பாவார் என்பதைக் கருதிப்பார்க்க வேண்டும். இது தமிழின அழிப்புக்கு வசதி செய்துகொடுப்பதற்காகவே திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட நகர்வாகும். வேறு பல இடங்களிலும் கொடுமைகள் செய்வதற்கு முன் இதே உத்தி கையாளப்பட்டுள்ளது.

வன்னியில் பன்னாட்டு சாட்சிகள் யாரும் இல்லாத படி செய்த ஒருவரை நாட்டின் மீயுயர் பதவிகளில் ஒன்றுக்கு நியமனம் செய்கிற ஓர் அரசை நம்பி, தன்னைத்தானே புலனாய்வு செய்து கொள்ளும் பொறுப்பை ஒப்படைக்க முடியுமா? முடியாதுதான்.

சில்வாவை இப்படிப் பதவியிலமர்த்தி அழகு பார்ப்பது பன்னாட்டுச் சமூகத்துக்கு, குறிப்பாக மனிதவுரிமைப் பேரவைக்குப் பெருத்த அவமானம் ஆகும் சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்னும் குறிக்கோள்களை மெய்யப்படச் செய்திட ஒரு செயல்திட்டம் வகுக்கும் நோக்குடன் முழுமையாகவும் உளமார்ந்த நம்பிக்கையோடும் சிறிலங்காவுடன் ஆண்டுக்கணக்கில் பாடாற்றிய பன்னாட்டுச் சமூகத்துக்கும் மனிதவுரிமைப் பேரவைக்கும் அவமதிப்பு ஆகும். மாறாக இரண்டுக்கும் இரண்டகத்தைத் தாம்பாளத்தில் வைத்து சிறிலங்கா பரிமாறியுள்ளது.

நிலைமாற்ற நீதிக்கான செயல் திட்டம் இரு ஐநா தீர்மானங்களில் விவரமாக எடுத்துரைக்கப்பட்டது. இரண்டாம் தீர்மானம் முதலாம் தீர்மானத்துக்குத் தாராள மனத்துடன் தரப்பட்ட காலநீட்டிப்பே ஆகும்; இந்தக் கால நீட்டிப்பு முட்டாள்தனம் போலத்தான் தோன்றுகிறது.

ஐநா மனிதவுரிமைப் பேரவை ஏற்கெனவே சிறிலங்கா தன் கடப்பாடுகளை நிறைவேற்ற ஈராண்டுக் கால நீட்டிப்பு வழங்கியது. அது இந்த ஆண்டு முடிகிறது. ஐநா மனிதவுரிமைப் பேரவையின் மீளாய்வுக்கு சிறிலங்கா காத்துள்ளது. ஐநா மனிதவுரிமைப் பேரவையானது அரசு தன் கடப்பாடுகளை மறுதலிப்பதன் அடையாளமாக மேஜர் ஜெனரல் சில்வாவைப் பதவியமர்த்தம் செய்வது குறித்து சிறிலங்காவைக் கேட்க வேண்டும்.

சிறிலங்கா ஏற்கெனவே பன்னாட்டுச் சமூகத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறிவிட்டதே போதும் என்பதால், இதற்கு மேல் காலநீட்டிப்பு ஏதும் தரக் கூடாது சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பாரப்படுத்த வேண்டும்.

பெருந்தொகையானோர் காணாமற்போவதற்குப் பொறுப்பானவரை முக்கியமான தேசியப் பதவியில் அமர்த்துவது காணாமற்போனோர் அலுவலகத்துக்குப் பல்லிருந்தால் அதையும் பிடுங்கிப்போட ஆகச் சிறந்த வழியாகும்.

ஐநா மனிதவுரிமைப் பேரவை தன் மீளாய்வின் போது இந்தச் சிக்கலை எழுப்ப வலியுறுத்துகிறேன்.

மேஜர் ஜெனரல் சில்வாவைப் பதவியலமர்த்துவது அமைதிக்கும் நீதிக்குமான செயல்வழியை சாகடிக்கக் கூடும் என்பதோடு, தமிழர்தம் உயிருக்கு உண்மையான அச்சுறுத்தலை மேலும் அதிகப்படுத்துவதாகும்.

அச்சுறுத்தல் இவ்விதம் அதிகமாவது குறித்துப் பன்னாட்டுச் சமூகம் விழிப்புடன் இருந்து வர வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது. மேஜர் ஜெனரல் சில்வா அல்லது இனவழிப்புக் குற்றத்துக்குப் பொறுப்பான எவரும் தங்கள் மண்ணில் அடிவைத்தால் உலகளாவிய மேலுரிமை அதிகாரத்தை செலுத்தும்படியும் நாம் வலியுறுத்துகிறோம் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

2009 மே மாதம் வன்னியில் மேஜர் ஜெனரல் சில்வாவின் சிறிலங்க 58ம் படைப் பிரிவின் கையில் நடந்தது என்ன?

ஐநா, அரசுசாரா அமைப்புகள், பிற தற்சார்பான தரப்புகள் அறிக்கையிட்டுள்ள படி, 70,000த்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பெருந்திரளாகக் கொலையுண்டார்கள், காணாமற்செய்யப்பட்டார்கள், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட முறையில் கொலைகள் நடந்தன, பாலியல் வன்புணர்வுகள் நிகழ்ந்தன, சாகடிக்க வேண்டுமென்பதற்காகவே மனிதநேய உதவி மறுக்கப்பட்டது, மருத்துவமனைகள் மீதும் இடப்பெயர்வு முகாம்கள் மீதும் செல்லடிக்கப்பட்டது (குண்டுவீச்சு நடைபெற்றது), சித்திரவதை அரங்கேறியது. இவையெல்லாம் சேர்ந்து இனவழிப்பு உள்ளிட்ட கொடுவதைக் குற்றங்கள் இழைக்கப்பட்டதைக் குறிக்கும்.

மேஜர் ஜெனரல் சில்வா 58ஆம் படைப்பிரிவின் தளபதி என்ற முறையில் பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போனதற்கும் முக்கியப் பொறுப்பாவார். மனிதர்கள் கூட்டங்கூட்டமாகப் புதைக்கப்பட்ட பெரும் புதைகுழிகளும் தொடர்ந்து வெளிப்படுகின்றன.

மேஜர் ஜெனரல் சில்வா மீது 2011ல் நியூ யார்க்கில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டு அரசதந்திரச் சட்ட விலக்கு என்ற அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளால் 2012ல் ஐநா அமைதிக் காப்புக் குழு ஒன்றிலிருந்தும் மேஜர் ஜெனரல் சில்வா அகற்றப்பட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top