News

சுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக உண்மையாக செயற்பட்ட தலைவர், மகிந்த ராஜபக்சதான் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடமராட்சியில் பேசிய சுமந்திரன், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் மகிந்த ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேள்வி எழுப்பட்டது. அதற்குப் பதில் வழங்கியுள்ள சுசில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஒன்றிணைந்து செயற்பட மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயத்தில் நாம் இணைந்து பயணிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

சாதாரண மக்களின் தேவைக்காகவும், அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும் எந்தவொரு தரப்புடனும் இணைந்து பயணிக்க நாம் தயாராகவே இருக்கிறோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக உண்மையாக செயற்பட்ட ஒரு தலைவர், மகிந்த ராஜபக்சதான் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவரது காலத்தில் தான் வடக்கு மாகாணத் தேர்தல் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி 1987 ஆம் ஆண்டுமுதல் இருந்தாலும், வடக்கு தேர்தலை நடத்த முடியாமல் தான் காணப்பட்டது.

இதுவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பானது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு கொடுத்ததன் மூலமாக தமிழ் மக்களுக்கான அரசியல் பிரச்சினைக்கு குரல் கொடுக்கமுடியாமல் போயுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வகித்த காலத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு மக்களுக்கு மட்டுமல்லாது, ஏனைய பிரதேச மக்களின் பிரச்சினையும் தீர்த்துக் கொள்ள முடியாமல் போனது.

எனினும் தற்போது உண்மையான கட்சிக்கு எதிர் கட்சிப் பதவி கிடைத்திருக்கிறது. மகிந்த ராஜபக்ச எதிர் கட்சித் தலைவர் பதவியை ஏற்றமையானது ஒரு இனத்திற்கு எதிரான தீர்மானமாக கருதக் கூடாது.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஒன்றிணைந்து செயற்பட மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயத்தில் நாம் இணைந்து பயணிக்கத் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top