News

தமிழர்களின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் கருவிகளா விசாரணை ஆணைக்குழுக்கள்? நாடாளுமன்றில் சீறினார் சிறிதரன்

சிறுபான்மைத் தமிழ் மக்களின் வாய்ப்புக்களைத் தட்டிப்பறிக்கும் கருவிகளாக இந்த விசாரணை ஆணைக்குழுக்கள் காணப்படுகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

– இவ்வாறு நாடாளுமன்றத்தில் சீறிப்பாய்ந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பாக  நாடாளுமன்றத்திலே இடம்பெற்ற விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

இந்த நாட்டிலே இடம்பெறும் பல்வேறுபட்ட விசாரணைகள் மற்றும் விசாரணைக் குழுக்கள் தொடர்பில் இந்த நாட்டின் உயர் சபையான இந்த மன்றிலே இந்த நாட்டிலுள்ள சிறுபான்மைச் சமூகங்களின் சார்பாகச் சில கருத்துக்களைப் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

சோல்பரி ஆணைக்குழு தொடக்கம் காலங்காலமாக இந்த நாட்டிலே அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் நம்பிக்கை கொண்டவர்களாக இந்த மக்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள் அவற்றின் செயற்பாட்டுக்காகத் தமது ஒத்துழைப்பையும் தங்களால் இயன்ற உயர் பங்களிப்பையும் வழங்கியிருக்கின்றார்கள். ஆணைக்குழுக்களினால் நீதியும் ஜனநாயகமும் நிலைநாட்டப்படும், தமது நியாயபூர்வமான அபிலாஷைகளும் கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையில் அதன் முன்னிலையில் சிறுபான்மை மக்களும் சிறுபான்மை இனத் தலைவர்களும் தமது கருத்துப் பகிர்வுகளையும் சாட்சியங்களையும் ஆதாரபூர்வமான சமர்ப்பணங்களையும் செய்திருக்கின்றார்கள். ஆயினும், ஜனநாயகக் கட்டமைப்புக்கள்மீது மிகுந்த நம்பிக்கைகொண்ட, சிறிய தொகையைக் கொண்ட இந்தத் தேசிய இனத் தலைவர்கள் அவ்வாறான பல ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளினால் மோசமாக ஏமாற்றமடைந்த வரலாறு இந்த நாட்டிலே உண்டு.

இந்த மக்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் ஜனநாயகக் கட்டமைப்புக்கள்மீதும் ஜனநாயக விழுமியங்கள்மீதும் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கையையும் பற்றினையும் அண்மைய நாட்களிலும் இந்த மன்றுக்கும் நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கின்றோம். நாட்டில் ஜனநாயகம் சவாலுக்குள்ளானவேளையில் அதற்கெதிராகப் போராடி, தேசிய அரசியலில் உறுதியும் ஜனநாயகமும் மீளத் திரும்புவதற்காகப் பாடுபட்ட, ஜனநாயக விழுமியங்களின்மீது அசையாத நம்பிக்கைகொண்ட தலைவர்களின் தேசம் என்ற பெருமையையும் கண்ணியத்தையும் இன்று இந்த நாடு பெற்றிருக்கின்றது. இந்த நாட்டின் அரசியலமைப்பு உறுதியாகப் பேணப்பட வேண்டும், ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும், பாராளுமன்றச் சம்பிரதாயங்கள் எந்த விட்டுக்கொடுப்புக்களுமின்றிப் பின்பற்றப்பட வேண்டும் என்பதில், தொகையிலே சிறிதளவான தேசிய இனமாகிய தமிழ் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் வெளிப்படுத்திய உறுதியான அக்கறை என்பது நாட்டின் கௌரவத்தின் மீதான, தேசத்தின் நலன் மீதான அக்கறை என்பதைத் தாங்கள் உணர்வீர்கள்.

இந்த வேளையில் இனம், மொழி, பிரதேசம் என்ற எவ்விதமான பாரபட்சங்களுமின்றி இந்த மக்களும் பெரும்பான்மைச் சமூகத்தோடு கரங்கோர்த்துச் சுபீட்சத்தை நோக்கி நம்பிக்கையோடு பயணிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்.

அண்மைக் காலங்களில் ஜனநாயக வழிமுறைகளினூடான தீர்வைக் கண்டடையும் சுபீட்சத்தை நோக்கிய, நம்பிக்கை மிகுந்த பயணத்தில் தமிழ் மக்கள் சார்பில் நாங்கள் மிகுந்த அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டினையும் வெளிப்படுத்தி வருகிறோம். எனினும், இந்த வேளையிலும் போலிக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த மக்கள் அச்சமும் அவநம்பிக்கையும் கொள்ளத்தக்க நடவடிக்கைகளும் மறைமுகமாக மொழி ரீதியான, இனரீதியான பாகுபாடுகளும் தொடர்கின்றமை மிக வேதனையளிக்கிறது. தமிழ் மொழி பேசுகின்ற தமிழ் மக்கள் தமது நியாயமான பிரயத்தனங்களுக்கான பலாபலன்களையும், தமது கடின உழைப்புக்கான பெறுபேறுகளையும் அடைந்து கொள்வதனைத் தடுப்பதற்கான கருவிகளாகவும் வழிமுறைகளாகவும் விசாரணை ஆணைக்குழுக்களும் விசாரணை அறிக்கைகளும் பயன்படுத்தப்படுகின்றமை இந்தத் தேசத்தில் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையீனங்களைத் தருகிறது.

தமது வாழ்வினைக் கௌரவம் மிக்கதாக அமைத்துக்கொள்வதற்குத் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு வழியான கல்வியும் அதன் வழியாகப் பெற்றுக் கொள்ளப்படக்கூடிய வேலைவாய்ப்புக்களும் தொடர்பில் அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதனை மனச்சாட்சியும் சமூகம் பற்றிய அடிப்படைப் புரிதலும் உள்ளவர்களால் மிக இலகுவாக அடையாளங்கண்டு கொள்ள முடியும்.

அண்மைக்காலத்தில் தேசிய ரீதியான தொழில் வாய்ப்பு சார்ந்த பரீட்சைகளில் அவற்றின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டுப் பெறுபேறுகள் பெறப்பட்ட பின்னர் கிடைக்கப்பெறுகின்ற பெறுபேறுகள் இனவிகிதாசாரத்திற்கு வேறுபட்டனவாக அமையுமாயின், அதாவது தமிழ் பேசும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிக வீதத்தில் சித்தியடைவார்களாயின், அந்தப் பரீட்சைகளை இரத்துச் செய்கின்ற அல்லது அந்தப் பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்படாமல் காலத்தை இழுத்தடிக்கின்ற அல்லது அந்தப் பரீட்சைகளின் பெறுபேறுகள்மீது தொடர்ச்சியான முறைப்பாடுகளைப்பெற்று, அவற்றின்மீது விசாரணைகளை நடத்தி, நியமனங்களை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு வழக்கம் தொடர்கிறது. பரீட்சைகள் நடத்தப்பட்டு, அவற்றின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டுப் பெறப்படும் பெறுபேறுகளின் அடிப்படையில் பரீட்சைகளை இரத்துச் செய்கின்ற நடைமுறையானது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத, இலங்கையின் பரீட்சை முறைமையினை கேலிக்குள்ளாக்கும் ஜனநாயக விரோதச் செயலாகும். இவ்விடயம் தொடர்பில் கடந்த காலத்திலும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் மன்றில் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட சில பரீட்சைகளில் தமிழ் மொழிமூலமான பரீட்சார்த்திகளின் சித்தி வீதம் மிகக்குறைவாக இருந்த சந்தர்ப்பங்கள் உண்டு. உதாரணமாக, 2012ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இலங்கைத் திட்டமிடல் சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் தமிழ் மொழிமூலப் பரீட்சார்த்திகள் எவரும் சித்தியடைந்திருக்கவில்லை. மிக அண்மையில், அதாவது 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வெளியான கணக்காளர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகளில் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளின் இன விகிதாசாரத்திற்கும் சித்தியடைந்த பரீட்சார்த்திகளின் இன விகிதாசாரத்திற்கும் இடையில் நம்ப முடியாத அளவிலான வேறுபாடு காணப்பட்டது. கணக்காளர் சேவை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 82 பரீட்சார்த்திகளில் தமிழ் மொழிமூலம் சித்தியடைந்த பரீட்சார்த்திகள் 2 பேர் மட்டுமே! திறந்த போட்டிப் பரிட்சையில் சித்தியடைந்த 120 பரீட்சார்த்திகளில் தமிழ் மொழிமூலப் பரீட்சார்த்தி ஒருவர் மட்டுமே! இவ்விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகளோ விசாரணைகளோ சந்தேகங்களோ இன்றி உடனடியாக நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்பட்டன. இவ்வாறு தமிழ் பேசும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் மிகக் குறைந்த சதவீதத்தில் சித்தியடைகின்ற பரீட்சைகள் தொடர்பில் எவ்வித கால தாமதங்களோ முறைப்பாடுகளோ விசாரணைகளோ சந்தேகங்களோ இன்றி உடனடியாக நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால், இலங்கையின் நிர்வாக சேவையில் 46 வெற்றிடங்களை நிரப்புவதற்காகக் கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்ரோபர் 8 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 59 பரீட்சார்த்திகளில் 21 தமிழர்கள் சித்தியடைந்தமை அசாதாரணமானது என்ற அடிப்படையில் அப்பரீட்சையின் பெறுபேறுகள்மீதான முறைப்பாடுகளும் முறைப்பாடுகள் மீதான விசாரணைகளும் ஏழு மாதங்களுக்கு மேலாக முடிவின்றித் தொடர்கின்றன.

இப்பரீட்சையில் சித்தியடைந்து உயர் புள்ளிகள் பெற்ற, நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 59 பரீட்சார்த்திகளின் பெயர், விவரம் அடங்கிய பட்டியல் அரச நிர்வாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் செயலாளரினால் கையொப்பமிடப்பட்டு 2018 ஜூலை 6ஆம் திகதி அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இதில் 38 சிங்கள பரீட்சார்த்திகளும், 20 தமிழ் பரீட்சார்த்திகளும் மற்றும் ஒரு முஸ்லிம் பரீட்சார்த்தியும் உள்ளனர். பெறுபேறுகள் வெளியான பின்னர், இப்பரீட்சையில் தமிழ் மொழிமூலமான 21 பரீட்சார்த்திகள் சித்தியடைந்தமை அசாதாரணமானது என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த பரீட்சை இரத்துச் செய்யப்படவுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. நேர்முகப்பரீட்சை நடத்தப்படாமல் காலவரையறையின்றித் தற்காலிகமாகப் பிற்போடப்பட்டிருந்தது.

இந்நிலைமையைக் கவனத்திற்கொண்டு நானும் இன்னும் சில  உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக எடுத்துரைத்தபோது, 2018ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 21ஆம் திகதி பொது நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர்  ரஞ்ஜித் மத்தும பண்டாரவால், அப்பரீட்சை இரத்துச் செய்யப்படவில்லை எனவும், தற்காலிகமாக நேர்முகத்தேர்வு பிற்போடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பான விசாரணை அறிக்கையொன்று பெறப்படவேண்டியிருப்பதாகவும் அறிக்கை கிடைத்தவுடன் யாருக்கும் பாதிப்பற்ற வகையில் அவ்விடயத்திற்குத் தீர்வு பெற்றுத்தரப்படும் எனவும் பாராளுமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.

பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி 7 மாதங்கள் கடந்த நிலையிலும் நேர்முகப்பரீட்சை இதுவரை நடாத்தப்படவில்லை.

இந்நிலையில், இந்தப் பரீட்சையின் இன்னொரு பாகமான இலங்கை நிர்வாக சேவை தரம் IIIக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2015 (2016) – 2ஆம் கட்டத்திற்கான நேர்முகப் பரீட்சைக்குத் தகுதிபெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர்ப்பட்டியல் 2018 நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டு, 2018 டிசம்பர் மாதத்தில் அவர்களுக்கான நேர்முகப்பரீட்சைகளும் நடத்தப்பட்டுவிட்டன.

2018 நவம்பர் மாதத்தில் பெறுபேறுகள் வெளியான திறந்த போட்டிப்பரீட்சைப் பரீட்சார்த்திகளுக்கான நியமனங்கள், இப்போது வழங்கப்படுமாயின் 2018 ஜூலை மாதத்தில் பெறுபேறுகள் வெளியான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் வயதில் கூடிய பரீட்சார்த்திகள் நிர்வாக ரீதியாகத் தமது சேவைக்காலம் முழுவதிலும் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகும் அபாய நிலையை எதிர்நோக்குகின்றனர்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையினை இரத்துச் செய்வதற்கான முயற்சிகள் தற்போது மீண்டும் அரசியல், நிர்வாக மட்டங்களில் விரைந்து முன்னெடுக்கப்படுவதாக நம்பத் தகுந்தவர்களால் அச்சம் வெளியிடப்படுகிறது. சித்தியடைந்த பரீட்சார்த்திகள் இவ்விடயம் தொடர்பில் அரச நிர்வாக அலகுகளை அணுகுகின்றபோதும் இவ்வாறான கருத்துக்களே உத்தியோகபூர்வமற்ற வகையில் தெரிவிக்கப்படுகின்றன. பெறுபேறுகள் வெளியாகி 7 மாதங்களுக்கும் மேலாக முடிவின்றித் தொடர்ந்து நடத்தப்படும் விசாரணைகளும் இதுவரையில் சமர்ப்பிக்கப்படாத விசாரணை அறிக்கைகளும் பரீட்சை தொடர்பாகப் பரீட்சைத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அவதானிப்பு அறிக்கைகளும்கூட மிக நீண்டகாலமாகியும் பொதுச்சேவை ஆணைக்குழுவைச் சென்றடையாமையும் பல்வேறு நம்பிக்கையீனங்களையும் சந்தேகங்களையும் தருகின்றன.

கடந்த காலத்தில் இலங்கை கணக்காளர் சேவைப் பரீட்சையின் பெறுபேறுகளும் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டது தொடர்பில்  உறுப்பினர்களால் இந்த மன்றின் கவனத்திற்கு எடுத்துரைக்கப்படிருந்ததைத் தாங்கள் அறிவீர்கள்.  பிரதம அமைச்சர் அவர்களால், அமைச்சினால் பரீட்சை இரத்துச் செய்யப்படவில்லை எனவும் சுயாதீன ஆணைக்குழுவான பொதுச் சேவை ஆணைக்குழுவே பரீட்சையை இரத்துச் செய்ததாகவும் பதிலுரைக்கப்பட்டது.

தற்போதுகூட சுயாதீன ஆணைக்குழுவான பொதுச் சேவை ஆணைக்குழு தனது தீர்மானங்களை எடுப்பதற்கு அவசியமானதெனக் கருதிக் கல்வி அமைச்சிடமும் பரீட்சைத் திணைக்களத்திடமும் கோரியிருந்த பரீட்சை தொடர்பான மிக அவசியமான அவதானிப்பு அறிக்கைகள்கூட அனுப்பப்படாமல் மிக நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுவதன்மூலம் மறைமுகமாகத் தவறான தீர்மானங்களை நோக்கி அழுத்தம் வழங்கப்படுகிறதோ என்னும் அச்சம் பரீட்சார்த்திகளால் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் பேசும் மக்களின் நியாயமான உழைப்பின் பலனையும் அவர்கள் தமது கடின முயற்சியினால் பெற்ற வாய்ப்புக்களையும் தட்டிப் பறிப்பதற்கான கருவிகளாக விசாரணைகளும் விசாரணை ஆணைக்குழுக்களும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று நாங்கள் அச்சமடைகின்றோம்.

எவ்விதமான இனம், மொழி, பிரதேசம் என்ற பாரபட்சங்களும் இன்றி இந்தத் தேசிய இன மக்களும் தங்களை நம்பி, தங்கள் தலைமையின்கீழ் சுபிட்சத்தை நோக்கி நம்பிக்கையோடு பயணிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை தங்கள் மேலான கவனத்தில் கொள்ளும்படி தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த காலத்தில் கல்வியில் தமிழர்கள்மீது திணிக்கப்பட்ட ‘தரப்படுத்தல்’ எனும் பாரபட்சம் காரணமாக இந்தத் தேசம் யுத்தத்தால் சிதைக்கப்பட்டு, நாங்கள் மீண்டுமொருமுறை சந்திக்க விரும்பாத காலப்பகுதி ஒன்றினூடாக நாடு பயணிக்கும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். எனவே, இவ்விடயத்தில் நீதியான தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு ஜனநாயத்தின் பெயரால் பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன். – என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top