News

பிரேசிலில் அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு; 305 பேரை காணவில்லை!

 பிரேசிலில் இரும்பு தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது பிரேசில் நாட்டின் பெலோ ஹாரிசன்டே நகருக்கு தென்மேற்கே புருமடின்ஹோ என்ற இடத்தில் இரும்பு தாதுக்களுக்கான சுரங்கம் ஒன்று அமைந்து உள்ளது.  இங்கு பயன்படுத்தப்படாத நிலையில் அணை ஒன்று இருந்து வந்துள்ளது.
இந்த சுரங்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் திடீரென அணை உடைந்து அதில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய நீரானது விளைநிலங்கள் மற்றும் சாலைகள் என அருகிலுள்ள பகுதிகளுக்குள் புகுந்தது.


இதில், டிராக்டர்கள், வீடுகள் மற்றும் பாலங்கள் மண்ணில் புதைந்து போயின.  மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.  இதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.  150 பேரை காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியானது.  இதனை தொடர்ந்து சமீபத்தில் அதிபராக பொறுப்பேற்ற ஜெயிர் பொல்சனாரோ தலைமையிலான புதிய அரசு பேரிடர் நிவாரண பணிகளுக்கு உத்தரவிட்டது.


இந்த நிலையில், தேடுதல் பணியில் ஈடுபட்ட குழுவின் தலைவர் எட்வர்டோ ஏஞ்சலோ கூறும்பொழுது, கடந்த 48 மணிநேர தேடுதல் பணியின் முடிவில், உயிர் பிழைத்தவர்களை கண்டறிவதற்கான வாய்ப்பு மிக குறைந்து உள்ளது.  ஆனால் தொடர்ந்து அவர்களை கண்டறியும் பணியில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம் என கூறியுள்ளார்.


இந்த நிலையில், அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.இதுபற்றி சுரங்க நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை 192 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என 305 பேரை காணவில்லை என தெரிவித்து உள்ளது.


கடந்த 1976ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையானது சுரங்கத்தின் கழிவு பொருட்களை தேக்கி வைப்பதற்காக பயன்பட்டு வந்தது.  இந்நிலையில், கடந்த 3 வருடங்களாக இது பயன்படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top