News

பிரேசில் நாட்டில் அணை உடைந்தது 10 பேர் பலி; 300 பேர் மாயம்!

 
பிரேசில் நாட்டில் ஒரு அணை உடைந்தது. இதில் 10 பேர் பலியாகினர். 300 பேர் மாயம் ஆகினர்.பிரேசில் நாட்டில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில், புருமாதின்ஹோ நகருக்கு அருகே வாலே என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் செயல்பட்டு வருகிறது.


இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 1 மணிக்கு இரும்புத்தாது வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதேபோன்று சுரங்க தொழிலாளர்களுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வந்த உணவு விடுதியில் ஏராளமான தொழிலாளர்கள் மதிய சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த சுரங்கத்தின் அருகே இருந்த அணை திடீரென உடைந்தது. அதில் இருந்து சேறு, ஊருக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியே சேற்றின் பிடியில் சிக்கியது. நிறுவனங்கள், தொழிலாளர்களின் வீடுகள் மற்றும் வாகனங்களை சேறு சின்னாபின்னமாக்கியது. சாலைகள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

பிரேசில் நாட்டில் அணை உடைந்தது 9 பேர் பலி; 300 பேர் மாயம்


தொழிலாளர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவு விடுதியும் சேற்றில் மூழ்கியது. அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறித்துடித்தனர்.
அணை சேற்றில் வாலே இரும்பு சுரங்கத்தில் இரும்பு தாது வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், உணவு விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் சிக்கிக்கொண்டனர்.


ஏறத்தாழ 300 பேரை காணவில்லை என முதல் கட்ட தகவல்கள் கூறின. அணை உடைந்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.அணை உடைந்த தகவல் அறிந்ததும், மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். இடுப்பளவு சேற்றில் இருந்து சுரங்க தொழிலாளர்களை அவர்களை பத்திரமாக மீட்ட காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.


இப்படி 279 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு விட்டனர். 10 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. மாயமானவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. சேற்றில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
சம்பவ இடத்துக்கு அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனரோவும், ராணுவ மந்திரியும் நேற்று சென்று பார்வையிட்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top