India

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டம்

 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக கூறிவிட்டது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது 

இந்த தீர்ப்பை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மதுரை ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்துசெய்யக்கோரி தமிழக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த இரு மனுக்களையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்ததோடு, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது ஸ்டெர்லைட் தரப்பு வக்கீல் அரிமா சுந்தரம் வாதாடுகையில், ஆலையை திறக்க அனுமதி வழங்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு அனுமதி வழங்க மறுப்பதாக தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ். வைத்தியநாதன் வாதாடுகையில், பசுமை தீர்ப்பாயம் கூறிய எந்த நிபந்தனையையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றவில்லை என்றும், ஆலையை திறக்க அனுமதி வழங்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள மூல வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆலையை திறக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்காததற்கான காரணங்களையும் அவர் விளக்கினார்.

பின்னர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாதாடுகையில், ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றும், மக்களின் நலனையும், சுற்றுச்சூழல் மாசுகேட்டையும் கருத்தில் கொண்டு இந்த ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கூறினார்.

அவரை தொடர்ந்து வாதிட்ட ஸ்டெர்லைட் தரப்பு வக்கீல் அரிமா சுந்தரம், உடனடி யாக மின் இணைப்பு வழங்கவும், ஆலையை திறக்கவும் இடைக்கால உத்தரவை இன்றே பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு, இன்று (அதாவது நேற்று) இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஏற்கனவே ஸ்டெர்லைட் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் வருகிற செவ்வாய்க்கிழமை மொத்தமாக விசாரித்து விரைவில் தீர்ப்பை அளிப்போம் என்று தெரிவித்து வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top