News

அமெரிக்காவை நடுங்கவைக்கும் உறை பனி – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு!

அமெரிக்காவின் மேற்கு திசையிலுள்ள மத்திய பகுதிகளில், பல தசாப்தங்களில் இல்லாத அளவு நிலவும் கடுங்குளிர் காரணமாக இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருவ சுழற்சி என்று அழைக்கப்படும் கடுமையான பனிப் பொழிவால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் மறை 17 பாகை செல்சியஸ் தட்ப வெப்ப நிலை நிலவுகின்ற நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.லோவாவில் 18 வயது மாணவர் ஒருவர் கல்லூரிக் கட்டிடத்துக்கு வெளியே உயிரிழந்து கிடந்தமை அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது கல்லூரியின் கட்டிடம் ஒன்றுக்கு கீழே கடந்த புதன்கிழமை அதிகாலை வீழ்ந்து கிடந்த குறித்த மாணவர், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

கடுங்குளிர், மற்றும் பனிச்சூழல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை நிலவும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சுமார் 250 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த துருவச் சுழற்சி எனும் கடுங்குளிர் பருவநிலையை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும், புளோரிடா போன்ற தென்பகுதி மாகாணங்கள் இந்தப் பேரிடரில் இருந்து தப்பியுள்ளன.

இதனிடையே, மிச்சிகன் மாகாணத்தில் டெட்ராய்ட்டில் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றின் முன்பாக 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அதே மிச்சிகன் மாகாணத்தில் குளிருக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய வகையில் ஆடைகளை அணியாத முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதுதவிர, அந்த மாகாணத்தில் உள்ள முக்கிய ஏரியொன்றும் கடும் பனியினால் முழுமையாக உறைந்து போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top