News

அரசியலமைப்பு பேரவை அரசியல் உதைபந்தாக மாறிவிடக்கூடாது

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கிடையில் பந்தாடும் அரசியல் உதைபந்தாக அரசியலமைப்புப் பேரவை மாறிவிடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டுக்காக சேவையாற்றக் கூடிய கௌரவமான நபர்களின் தன்மானத்தை உறுதிப்படுத்தும் வகையிலும், அரசியலமைப்பின் கௌரவத்தைப் பேணும் வகையிலும் செயற்படுவது அவசியமானதாகும் என்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்பு பேரவையினால் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பில் ஐ.ம.சு.மு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியலமைப்புப் பேரவையானது ஜனாதிபதியுடன் இணைந்து சுமுகமான முறையிலேயே உயர் பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்வதாகவும், ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் கூடிய கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் அதிகாலையில் என்ன செய்துகொண்டிருந்தார் என்ற கேள்வியும் உள்ளது. 19ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட முன்னர் பிரதம நீதியரசர்களின் நியமனங்கள் எவ்வாறு இடம்பெற்றன என்பதை நாம் அறிவோம். முன்னாள் பெண் நீதியரசராகவிருந்தவர் எவ்வாறு நீக்கப்பட்டார் என்பதையும் நாம் அறிவோம்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஒரே இரவில் பாராளுமன்றத்தில் விசாரிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு அகற்றப்பட்டார். இவ்வாறான நிலைமைகளை மாற்றும் நோக்கிலேயே 19ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு அதற்கமைய அரசியலமைப்பு பேரவை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய இரா.சம்பந்தன் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மூன்று வருடங்களாக அரசியலமைப்பு பேரவையில் பங்கெடுத்திருந்தேன். மிகவும் அவதானமாகவும், அக்கறையுடனும் செயற்பட்டே அரசியலமைப்பு பேரவையினால் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படுவதுடன், ஜனாதிபதியால் மேலும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டால் அது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி நியமனங்களை மேற்கொண்டுள்ளோம்.

ஜனாதிபதிக்கும், அரசியலமைப்பு பேரவைக்கும் இடையில் சிறந்த பணியாற்றும் சூழலை உறுதிப்படுத்துவதற்கு சபாநாயகரான நீங்கள் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அரசியலமைப்பு பேரவைக்கு ஐவரின் பெயர்களை நியமிக்க வேண்டும். மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலதா அத்துகோரலவை பிரதமர் நியமித்திருந்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவரை அடுத்த உறுப்பினராக நியமிக்க வேண்டும் என நான் கூறியிருந்தேன். இது தொடர்பில் நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் கலந்துரையாடினேன். அவ்வாறே சமல் ராஜபக்ஷவின் பெயரை நான் முன்வைத்தேன்.

சமல் ராஜபக்ஷவை பிரேரித்த நான் எவ்வாறு அரசியலமைப்பு பேரவையில் நியமனங்களின் போது பக்கச்சார்பாக செயற்பட்டிருப்பேன் எனக் குற்றஞ்சாட்ட முடியும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top