Canada

கனடாவின் பொதுத்தேர்தலுக்கான மூன்று இடைத்தேர்தல்கள் ஆரம்பம்; சூடு பிடிக்கும் அரசியல் களம்!

கனடாவின் பாராளுமன்றத்திற்கான மூன்று இடைத்தேர்தல்கள் இன்று (திங்கள்) நடைபெறுகின்றன. இது இவ்வருடம் அக்டோபரில் நடைபெறவுள்ள, கனடியப் பொதுத்தேர்தலுக்கு முன்னரான கள நிலைகளை ஆயும் தேர்தலாக, வேறு கொள்ளப்படுகிறது.

குறித்த தேர்தலானது, பிரிட்டிஸ் கொலம்பியா, கியூபெக், ஒன்ராரியோ என முதல் மூன்று பெரு மாநிலங்களில் நடைபெறுகின்றன. இதில் பிரிட்டிஸ் கொலம்பியா பேர்னபி தெற்கில் நடைபெறும் இடைத்தேர்தல், அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதில், முதலாவது சிறுபான்மையினராக, தேசியக் கட்சி ஒன்றின் தலைவரான, சிக்கிய இனத்தைத் சேர்ந்த யட்மிட் சிங், மூன்றாவது கட்சியான புதிய சனநாயகக் கட்சியின் சார்பில், பாராளுமன்ற பிரவேசத்திற்காக போட்டியில் உள்ளார்.

இதில் இவர் வெற்றி வாய்ப்பை இழந்தால், இவரது தலைiமைப் பதவி சிக்கலுக்கு உள்ளாகும். எனவே இத்தொகுதியை வென்றாக வேண்டிய நிலையில் அவர் உள்ளார். இத்தொகுதி கடந்த இரண்டு தேர்தல்களிலும் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில், புதிய சனநாயகக் கட்சியால் வென்றெடுக்கப்பட்ட தொகுதியாகினும், பெரும்பான்மை சீன இன மக்களைக் கொண்ட தொகுதி, ஒரு இந்திய பின்னணியைக் கொண்டவரை வெற்றி பெற அனுமதிக்குமா? எனப் பார்க்கப்போகிறோம்.

இருக்க யட்மிட் சிங் இந்தியாவிற்கு எதிரான, கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்ட சீக்கியர் என, ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டவர் என்பது வேறு விடயம்.  லிபரல் கட்சியுடனேயே சிங்கிற்கு பலத்த போட்டி உண்டு.அடுத்த தேர்தல், கியூபெக்கின் ஓட்ரமவுண்ட் தொகுதியில் நடைபெறுகிறது.

ஒரு காலத்தில் லிபரல் கட்சியின் கோட்டையாக இருந்த தொகுதி, பின்னர் புதிய சனநாயகக்கட்சியின் தலைவராக இருந்த, மக்கிலேயரால் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 12 ஆண்டுகளாக அவர் வசம் இருந்த தொகுதி. இதை மீண்டும் தன்னகப்படுத்த ஆளும் லிபரல் கட்சி கடும் முயற்சியில் உள்ளது.

2011இல் யக் லேட்டனின் தலைமையின் கீழ், 54 தொகுதிகளை கியூபெக்கில் வென்று சரித்திரம் படைத்த புதிய சனநாயகக் கட்சி, கடந்த தேர்தலில் மக்கிலேயரின் கீழ், 16 ஆசனங்களையே கியூபெக்கில் வென்றது. ஒக்ரமவுண்டை அது இத்தேர்தலில் இழுக்குமாக இருந்தால், அதுவும் பெரும் வாக்குவித்தியாசத்தில் இழந்தால், வரும் ஒக்டோபர் தேர்தலில் அது கைவசம் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் இழக்கும் நிலைக்கு, கியூபெக்கில் தள்ளப்படலாம்.

அது அதன் உத்தியோகபூர்வ கட்சி நிலைக்கே, ஆபத்தை பாராளுமன்றத்தில் உண்டு பண்ணலாம். இருக்க வரும் பொதுத் தேர்தலில் ஏனைய மாநிலங்களில், இழக்கும் தொகுதிகளை இட்டு நிரப்புவதற்கு, கியூபெக்கில் தற்போதைய புதிய சனநாயகக்கட்சியின் 16 ஆசனங்களையும், ஆளும் லிபரல் கணக்கில் கொண்டு காய் நகர்த்துகிறது, என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

அந்த வகையில், இந்த தொகுதி முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்தது, ஒன்ராரியோ யோர்க் சிம்மோவில் நடைபெறும் இடைத்தேர்தல். இது எதிர்கட்சியான பழமைவாதக்கட்சியின் கோட்டை. இங்கு அக்கட்சி தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பதில் ஜயமில்லை.

இருப்பினும், பழமைவாதக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று, மக்கள் கட்சி என புதிய கட்சி ஒன்றை உருவாக்கி, இன்று மேற்கத்தைய உலகை ஆக்கிரமித்துவரும், வெள்ளை இனவாதத்தை இலக்காகக் கொண்டு, இயங்கிவருகின்றார் எனக் குற்றச்சாட்டப்படும் மக்சி பேனியரின் கட்சி, எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது, இத்தொகுதியில் முதன்மையாகவும், ஏனைய தொகுதிகளிலும் அவதானத்தில் கொள்ளப்படும் மேலும் ஒரு முக்கிய விடயமாகும்.

அதேவேளை, கியூபெக் முதன்மை கம்பனி ஒன்றை மையமாகக் கொண்டு, ஆளும்கட்சி அதிகார துஸ்பிரயோகம் எனப் பெரிதும் பேசப்படும் விடயம், தேர்தல் களத்தில் மக்கள் பிரதிபலிப்பாக வெளிப்படுகின்றதா? என்பதையும் இத்தேர்தலில் முக்கியமாக கவனிக்கப்போகின்றோம்.

ஆக மொத்ததில் வரும் அக்டோபர் மாத கனடிய பொதுத்தேர்தலுக்கு முன்னரான, களநிலைமைகளை நாடிபிடித்துப் பார்க்கும் தேர்தலாக அமையவுள்ள இவ்விடைத் தேர்தல்கள், தரப்போகும் முடிவுகளின் பிரகாரம் மேலதிக ஆய்வுகளை இன்று மாலை பார்ப்போம்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top