India

பாகிஸ்தானில் புகுந்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் 350 தீவிரவாதிகள் கூண்டோடு பலி

புதுடெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக,  ன்று அதிகாலை 3.30 மணி அளவில், இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. இதில், பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கியமான முகாம் தகர்க்கப்பட்டு, 350 தீவிரவாதிகள் கூண்டோடு கொல்லப்பட்டனர். இந்த 90 வினாடி தாக்குதலில் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. சக்தி வாய்ந்த இந்திய விமானங்களை தடுக்க வந்த பாகிஸ்தானின் எப்-16 போர் விமானங்கள், மிரண்டு போய் பின்வாங்கின. 

 காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலால் நாடே கொந்தளித்தது.

இந்த தீவிரவாத அமைப்புக்கும், இதை சீராட்டி வரும் பாகிஸ்தானுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் மக்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் ஆவேசப்பட்டனர். ‘தீவிரவாதிகளை அழிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதிகள் அதிரடியாக வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்பதை உணர்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ‘இந்தியா தாக்கினால் நாங்களும் திருப்பி தாக்குவோம்’ என மிரட்டினார். இது, இந்தியாவின் கோபத்தில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது போல் இருந்தது.

கடந்த 2016ல் உரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியாகினர். அப்போது, இந்திய ராணுவம் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து, தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது. இது, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என அழைக்கப்பட்டது. இதே போன்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை இம்முறையும் இந்தியா நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெரியளவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான பிரமாண்ட அளவில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன. இனியும் பொறுக்கக் கூடாது என முடிவு செய்த மத்திய அரசு அதிரடி ஆபரேஷனில் களமிறங்கியது.

ஆனால், இம்முறை ராணுவத்திற்கு பதிலாக, விமானப்படை களமிறக்கப்பட்டது.  இன்று அதிகாலை 3.30 மணியளவில் திட்டமிட்டபடி பல்வேறு விமானப்படை தளங்களில் இருந்து 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் 1000 கிலோ வெடி பொருட்களுடன் வானில் சீறிப் பாய்ந்தன. 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்கு பிறகு முதல் முறையாக எல்லை தாண்டிச் சென்ற இந்திய போர் விமானங்கள், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியிலிருந்து 80 கிமீ தொலைவில்  பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியை அடைந்தன. அங்கு செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மிகப் பெரிய பயிற்சி முகாம் மீது மிகவும் துல்லியமாக தாக்குதல் நடத்தக்கூடிய 6 லேசர் ரக வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதில், தீவிரவாத முகாம் பூண்டோடு அழிந்தது.

அதில், தூங்கிக் கொண்டிருந்த 350 தீவிரவாதிகள் கூண்டோடு கொல்லப்பட்டனர். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் மைத்துனரும், இந்த அமைப்பின் படை தளபதியுமான யூசுப் அசாரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டான். இது தவிர, மனித வெடிகுண்டு பயிற்சி பெற்று வந்த தீவிரவாதிகள், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த தீவிரவாத தளபதிகள், தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பவர்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் சமாதி கட்டப்பட்டது. வெறும் 90 விநாடிகளில் தீவிரவாதிகளை தடம் தெரியாமல் அழித்த மிராஜ் 2000 விமானங்கள் சிறு கீரல் கூட இல்லாமல் 4.05க்கு இந்திய வான் எல்லைக்குள் வெற்றிகரமாக திரும்பின. இதற்கிடையே, தங்களின் வான் எல்லைக்குள் இந்திய போர் விமானங்கள் நுழைந்ததை பார்த்ததும், அவற்றை விரட்ட பாகிஸ்தான் விமானப் படையின் எப்-16 போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. ஆனால், மிராஜ் 2000 விமானத்தின் சக்தியை கண்ட பாகிஸ்தான் விமானங்கள் மிரண்டு போய் பின் வாங்கின.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் நடத்தப்பட்ட இத்தாக்குதலை மத்திய அரசு காலையில் உறுதிப்படுத்தியது. முன்னதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து இத்தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தகவல் தெரிவித்தார்.
வழக்கம் போல் பாகிஸ்தான் அரசு இத்தாக்குதலை மறுத்துள்ளது. அதே நேரத்தில், இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளது. ‘‘இந்தியாவின் இந்த அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி தருவோம்’’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. எல்லையில் ராணுவமும், விமானப்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

விடிய விடிய கண்காணித்த பிரதமர்
தீவிரவாதிகளை தாக்க திட்டமிட்டப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் பிரதமர் மோடி தூங்காமல் கண்காணித்தபடியே இருந்துள்ளார். அதிகாலையில் விமானங்கள் புறப்பட்டு தாக்குதலை முடித்து வெற்றியுடன் திரும்பிய பின்னரே அவர் நிம்மதி அடைந்துள்ளார். அதன் பின் காலையிலும் அவர் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக மூத்த அதிகாரிகள் கூறி உள்ளனர். தீவிரவாதிகளை அழிக்கும் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததும், முப்படை தளபதிகள் பிரதமர் மோடியை சந்தித்து சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது இந்தியா தாக்குதல்

* பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
* இந்தியாவின் ராணுவம் இல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிக எண்ணிக்கையிலான தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், அமைப்பின் மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.

1971ம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறை…
1. பாகிஸ்தானில் பாலகோட் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தின.
2. மிராஜ் 2000 ரகத்தை சேர்ந்த 12 விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தின. முன்பே திட்டமிட்டபடி, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் லேசர் தொழில்நுட்ப உதவியோடு துல்லியமாக கணித்து 1,000 கிலோ வெடிகுண்டுகள் சரமாரியாக வீசப்பட்டுள்ளன.
3. பாலகோட்டின் 6 இடத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஓர் இடம் மலை உச்சியில் அடர்ந்த வனப்பகுதி.

4. குண்டுவீச்சு 90 விநாடிகளில் அதாவது ஒன்றரை நிமிடங்களில் நடந்துள்ளது.
5. போர் விமானங்கள் குண்டுகள் வீசி அழித்திருப்பது ஜெய்ஷ் இ முகமதுவின் மிகப்பெரும் தீவிரவாத பயிற்சி முகாம்.
6. உளவுத்துறை அளித்த தகவலின்படி, பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
7. காஷ்மீருக்குள் ஊடுருவி மேலும் பல தற்கொலைப்படை தாக்குதலை நடத்துவதற்காக தீவிரவாதிகளுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பயிற்சி அளித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

8. பெரும் ஆபத்து ஏற்படாமல் தடுப்பதற்காகவே இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று வெளியுறவு செயலர் விஜய் கோகலே கூறியுள்ளார்.
9. அதிக எண்ணிக்கையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த கமாண்டர்கள் உள்ளிட்டோர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தம் சுமார் 300 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
10. 1971ம் ஆண்டுக்கு பின்னர், இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top