India

மீண்டும் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர்: மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்த ஒரு வாரத்தில் மீண்டும் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த தொலைபேசி பேச்சை குறுக்கிட்டு கேட்ட போது சதி அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இந்திய பாதுகாப்பு படைகளுக்கு எதிராக மிகப்பெரிய தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படைகளுக்கான யுக்திகளை மாற்றி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்டி  கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டது.

அந்த அமைப்பின் தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டு காருடன் வந்து பாதுகாப்பு படையினர் பயணித்த பேருந்தில் மோதியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுக்க கொந்தளிப்பை உருவாக்கிய இந்த சம்பவத்தை அடுத்து உளவுத்துறையினர் முடுக்கி விடப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு பேசியதை உளவுத்துறை இடைமறித்து கேட்டுள்ளது. அப்போது, இந்திய பாதுகாப்பு படையினர் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.

இதற்காக பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் 21 பேர் காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவி உள்ளதையும், அவர்களில் மூன்று பேர் தற்கொலை தாக்குதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதையும், அவர்கள் காஷ்மீர் தவிர பிற மாநிலங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு உளவுத்துறை அறிக்கையும் சமர்பித்துள்ளது. உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் காஷ்மீர் மாநிலத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top